புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம், தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் வீரமணி மகன் விக்கி, இவர் ஜிம் பயிற்சியாளர். இவரது உறவினர் இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில், ஒரு கும்பல் அவர் மீது கற்களை வீசி தாக்கியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த விக்கி உயிரிழந்தார். இந்த தகராறில் விக்கியின் நண்பர் மூர்த்தி, படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அசோக், பரணி, ஸ்ரீகாந்த் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில் நிலையம் செல்ல கூடிய சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்கப்படும், வழக்கில் இருந்து விடுபடாத அளவிற்கு தண்டனை கொடுக்கப்படும் என உறுதி அளித்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் கொலை செய்யப்பட்ட விக்கியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று திரண்டு கைதான நால்வரின் வீடுகள் உட்பட அப்பகுதியில் உள்ள 10 வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை, அடித்து நொறுக்கி சூறையாடினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பைக்குகள் மற்றும் ஒரு கார் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியே, கலவர பூமியாக மாறியது.