அண்மையில் தமிழகத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்த நிலையில், ஆளுநர் பங்கேற்ற அண்ணாமலை பல்கலைக்கழக விழாவில் அழைப்பு விடுக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் பங்கேற்காதது  கவனத்தை ஈர்த்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 84வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு  பட்டமளித்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டம், முதுநிலை மற்றும் இளநிலை நிலை பிரிவுகளில்  துறை ரீதியாக முதலிடம் பிடித்த 1014 மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. மேலும் கடந்த ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு முதல்  மே 2021ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நேரடி மற்றும் தொலைதூரக் கல்வியில் படித்து முடித்த 1,21,525 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல் அளித்தார்.



குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில்  நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேனீர் விருந்தை புறக்கணித்தனர்.



இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தலையேற்று பட்டமளிக்க தமிழக ஆளுநர்   ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தார். மேலும் இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கவும், சிறப்பிக்கவும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எ.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகிய திமுக அமைச்சர்கள் இருவரும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, நிலையில் திமுக அமைச்சர்கள் இருவரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.




இதற்கு முன்னதாக நேற்று கவர்னர் பல்கலைக்கழக சிண்டிகேட் ஹாலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பல்கலைக்கழக தோற்றம், தற்போது வரை பல்கலைக்கழகம் அடைந்துள்ள மாற்றங்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் கற்பித்தல், கற்றல், மதிப்பீடு, ஆராய்ச்சி, விளையாட்டு குறித்தும், பல்கலைக்கழகத்தில் எடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாடு குறித்து பல்கலைக்கழக கலைத்துறை சார்பில் நடந்த    கலைநிகழ்ச்சியை கவர்னர் ஆர்.என். ரவி, அவருடைய மனைவி லட்சுமி ரவி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்தராவ் வி.பாட்டீல் கலந்து கொண்டார்.