கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரிக்கரையில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து வீராணம் ஏரி ராதாமதகு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஏரியின் விரிவாக்கம் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள், அங்கு புதிதாக 2 மரக்கன்றுகளை நட்டனர். 



 

இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது, கடலூர் மாவட்டத்தில் நபார்டு கிராம சாலை திட்டத்தின் மூலம் 24 கோடி ரூபாய் மதிப்பில் 7 பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு பணியை மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசித்து 69 கிலோ மீட்டர் சாலையை விரிவுபடுத்திட பரிந்துரை செய்யப்பட்டதின் அடிப்படையில் இதனை இதர மாவட்ட சாலையாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்ணாடம்-திட்டக்குடி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 



 

கடலூர்-மடப்பட்டு இடையே 37 கிலோ மீட்டா் தூரத்தில் ரூ.231 கோடியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சாலையை விரிவுபடுத்துவதால் சாலையோர மரங்கள் அகற்றப்படுகின்றன. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வெட்டப்படும் 1 மரத்திற்கு பதிலாக 10 மரங்களை நட்டுவைக்கும் விதமாக கடலூர் மாவட்டத்தில் 7 உட்கோட்டத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை இன்று தொடங்கி உள்ளோம். 



 

வீராணம் ஏரியின் கீழ்கரை உள்ள கந்த குமாரன் மேற்கு கரையில் உள்ள சோழதரம் ஆகிய இரு பகுதிகளையும் இணைப்பதற்கு ஏரியின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான பணியை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் ஈசிஆர் சாலை பணியை நெடுஞ்சாலை துறை திருப்பி அனுப்பியதாக பரவி செய்தி குறித்து கேட்ட கேள்விக்கு, அது முற்றிலும் தவறான செய்தி என்றும், மேலும் ஈசிஆர் சாலை முழுக்க முழுக்க மாநில அரசின் சாலை எனவும் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் தான் மத்திய அரசை எடுத்துகொள்ள சொன்னதாகவும் கூறினார் இது மட்டும் இன்றி இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 



 

ஆய்வின் போது, கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ், தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் பாலமுருகன், கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித்சிங், கோட்ட பொறியாளர் பரந்தாமன் உள்படபல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.