உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு திருவிழாக்கள் நடைபெறும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சனமும் இக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறும். மூலவரான நடராஜர் உற்சவரராக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இந்த திருவிழாக்களுக்கான உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள் குவிவார்கள்.




சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கடந்த 28ஆம் தேதி  துவங்கியது. நாள்தோறும் தொடர்ந்து பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் தினமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது. பஞ்சமூர்த்திகள் தனி தனி தேர்களில் எழுந்ததருளி அருள் பாலிப்பார்கள். முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் 6ம் தேதி மாலை நடைபெறுகிறது.

 

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆருத்ரா தரிசன விழாவை ஒட்டி கடலூர் மாவட்டத்திற்கு வருகின்ற ஆறாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த விடுமுறையை ஈடு செய்ய வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.