புதுச்சேரியில் உள்ள சுடுமண் சிற்ப பூங்காவை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகயில், புதுவையில் சுற்றுலாத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். பட்ஜெட்டிலும் புதிய திட்டங்கள் இடம்பெறும் என நம்புகிறோம். சுற்றுலாவுக்கான திட்டங்களை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். இத்திட்டங்களை செயல்படுத்தும் போது சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். சுற்றுலா முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் ரங்கசாமி மாநாடு நடத்தினார்.


இதில் பங்கேற்றவர்கள் புதுவையில் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த சுடுமண் சிற்ப பூங்கா பூகோள ரீதியில் புதுவைக்கு பெருமை சேர்க்கும். இங்கு ரூ.5 கோடியில் 40 கிலோவாட் சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.  ஆக்கப்பூர்வமான பல திட்டங்களால் புதுவை மேலும் வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் கூறினார். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிகளுக்கு சில திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.




புதுவைக்கு என சில திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறார்கள்.  அதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று என்னிடம் கேட்டு இருந்தார்கள். அரசு அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும். முதலமைச்சரும் எவ்வித பாகுபாடு இல்லாமல் செயல்பட்டு வருகிறார். என்னை சந்தித்த எம்.எல்.ஏ-.க்களை பாராட்டினேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று அவர்களது தொகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து சென்று இருக்கிறார்கள்.




கர்நாடக மாநிலத்தில் பர்தா அணியும் பிரச்சனை பூதாகரமாக எழுந்துள்ளது. இது குறித்து புதுவை கல்வித்துறை முடிவு செய்யும். சீருடை கட்டுப்பாட்டை கல்வித்துறை நிர்ணயிக்கும் இவ்வாறு அவர் கூறினார். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கரன்  எம்.எல்.ஏ., சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். 40 கிலோவாட் சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி 9ஆம் தேதி தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், முதலமைச்சர் வராததால் திட்டம் தொடங்கப்படவில்லை. வேறொரு நாளில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.