புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியதாவது:- புதுச்சேரியில் மதவாத சக்திகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அரியாங்குப்பம் அரசு பள்ளிக்கு பர்தா அணிந்து வந்த மாணவியை, ஆசிரியர் ஒருவர் பர்தா பள்ளிக்கு வரக்கூடாது கூறியுள்ளார். இது குறித்து புகார் அளித்தும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் முதலமைச்சர் ரங்கசாமி தலையிட்டு சம்பந்தப்பட்ட அசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் அரசு பள்ளியில் முஸ்லிம் மாணவி பர்தா அணிவதற்கு தடை விதித்த காரணத்தால் அம்மாநிலமே பற்றி எரிகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநிலை புதுச்சேரியில் உருவாகிவிடக்கூடாது. வாதானூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆர்எஸ்எஸ். பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ். கலாசாரத்தை பள்ளிகள் மூலமாக புதுவையில் நுழைப்பதற்கான வேலையை பாஜக. செய்கிறது. அதற்கு கல்வித்துறை அமைச்சர் தூண்டுதலாக உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.




புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்தபிறகு மதவாத சக்தி தலைதூக்கி உள்ளது. இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக கல்வித்துறை விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறுகிறார்கள். இந்த விசாரணையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. முதலமைச்சர் ரங்கசாமி மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்தால் கல்வித்துறையை முதலமைச்சர் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். புதுவையில் மதரீதியான பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எரிந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


புதுச்சேரியில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் எவ்வித வளர்ச்சி பணி நடைபெறவில்லை என சபாநாயகர், கவர்னரை சந்தித்து உள்ளனர். 3 எம்.எல்.ஏ.க்கள் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முதல்-அமைச்சரிடம் தான் முறையிட வேண்டும். சபாநாயகர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்கலாம். சபையை நடத்துவது தான் அவரது வேலை. அரசியல் செய்வது அவரது வேலையில்லை. அவர் அரசியல் செய்ய வேண்டுமென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செய்யலாம். சபாநாயகர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்படுவதை ஏற்க முடியாது என அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர