கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை, ஆனால் தீவனப்புல் நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி வசந்தன். இவர் பொறியியல் படித்து முடித்துவிட்டு மூன்று வருடமாக விவசாயம் செய்து வருகிறார். இதில் தீவனப்புல் சாகுபடியில் எட்டு மாதமாக ஈடுபட்டு வருகிறார். இவர் தன்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கோ 3, கோ- 4 என்ற ரக தீவனப்புல்லை பயிட்டுள்ளார். தீவனப்புல் சாகுபடி குறித்து வசந்தன் கூறுகையில், ”தீவனப்புல் வளர்ப்பு முறை எனக்கு மிகவும் லாபமாக இருக்கிறது. நான் என்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து மாதம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் லாபம் எடுத்து வருகிறேன். முதலில் குறைந்த அளவில்தான் இந்த தீவனப்புல்லை பயிரிட்டு இருந்தேன். அதன் பிறகு இதற்கு பொதுமக்களிடம் அதிக தேவை இருப்பதால் ஒன்றரை ஏக்கரில் பயிரிட்டுள்ளேன்.
இந்த தீவனப்புல்லை ஆடு, மாடுகள் விரும்பி உண்னும். தண்டுகளை கூட மிச்சம் வைக்காமல் தின்று விடும். நிலத்தில் இருந்து அப்படியே அறுத்து போடலாம். இந்தத் தீவனப்புல் கட்டையை நான் சென்னையில் இருந்து ஆர்டர் செய்து வரவைத்து, வயலில் நடவு செய்தேன். நடவு செய்த 30 வது நாளில் முதல் பறி, ( First Cutting ) செய்யலாம். அதன் பின்னர் அடுத்து முப்பது நாட்களில் தொடர்ந்து அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். குறைந்தபட்சம் ஒவ்வொரு செடியும் நான்கு முதல் ஐந்து அடி வரை வளரும்.
ஒரு கட்டு தீவனப் போல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். தேவைப்படும் நபர்கள் வயலில் வந்து அறுவடை செய்து கொள்வார்கள். இந்தத் தீவனப்புல் வளர்ப்பு முறை தொடர்ந்து ஐந்து வருடங்கள் வரை தொடரலாம். நான் இயற்கை முறையில் தீவனம் புல் வளர்வதற்கு எருவு மட்டும் தான் பயன்படுத்துகிறேன். தேவை என்றால் நீங்கள் யூரியாவே பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தீவனப்புல் வளர்ப்புக்கு அதிக ஆட்கள், அதிக நேரம் ஏதும் தேவைப்படாது. பூச்சி தாக்குதலும் அதிக அளவில் இருக்காது. எனவே குறைந்த செலவில் தேவையான அளவு வருமானம் பார்க்கலாம்” எனக் கூறினார்.