விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்த 72,522 விவசாயிகள், 1,51,737 ஏக்கருக்கு பயீர் காப்பீடு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 2 லட்சத்து 80 ஆயிரத்து 72 எக்டர் நிகர சாகுபடி பரப்பாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் நிலங்களில் நெல், மணிலா, எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்டோபர் மாதம் வரை 1,06,335 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்தில் 45,402 ஏக்கர் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.




இந்நிலையில், இயற்கை பேரிடரின் போது, பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க, ஆண்டு தோறும் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை அறிவுறுத்தி வருகின்றது. அதன்படி, கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்த 26,386 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். அந்த விவசாயிகளுக்கு 50 கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.


இதே போன்று, இந்தாண்டு நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடந்த 15ம் தேதிக்குள் திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில், 72,522 விவசாயிகள் 1,51,737 ஏக்கருக்கு திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, தற்போது நவரை பருவத்திற்கான பயிர் காப்பீடு துவங்கியுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்வதற்கு வரும் ஜன., 17ம் தேதி வரை காலக்கெடு உள்ளது.




உளுந்து காப்பீடு மேலும், வானிலை ஆராய்ச்சி நிலைய முன்னறிவிப்பின் படி வடகிழக்கு பருவமழை காலத்தில் மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தீவிர உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவசாயிகள் உளுந்து பயிருக்கு வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.


காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களான வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மற்றும் பசலி 1431ஆம் ஆண்டு ராபி பருவத்தில் உளுந்து சாகுபடி செய்ததற்கான அடங்கல் ஆகியவற்றுடன் காப்பீட்டு கட்டணமாக ஏக்கருக்கு ரூ.253.35 பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செலுத்தி திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன்பெறலாம்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண