கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் கொள்ளிடம் கரையோரத்தில் சுமார் 7க்கும் மேற்பட்ட மலைவாழ் குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இவர்கள் அதே ஆற்றுப்படுகையில் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து  கடந்த சில நாட்களாக பல்வேறு மாவ்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. தொடர் கன மழையால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளத்தால் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் நகர பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோர கிராம பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

 



 

மேலும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 50க்கு மேற்பபட்ட கிராமங்களிலும் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் அங்கு வசித்து வந்த மலைவாழ் மக்களை வெளியே வரும்படி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் மலைவாழ் குறவர்கள் ஆண்டுதோறும் இதே நிலை தான் எங்களுக்கு ஏற்படுகிறது ஆகவே நிரந்தரமாக வீடு கட்டுவதற்கு இடம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது அதிகாரிகள் சென்றவுடன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த கண்ணையன், துரைப்பாண்டி, ராமு மற்றும் சிலர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் தெரு விளக்கை அணைத்துவிட்டு கழி மற்றும் இரும்பு கம்பியைக் கொண்டு மலைவாழ் குறவர்களான கொளஞ்சி, ராம்கி, சுமதி, சுகன்யா, உள்ளிட்ட பெண்களையும் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் பன்றி மேய்க்கிற குர பயல்களுக்கு இடம் வேண்டுமா என்று கேட்டும் அவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியும் அவதூராக பேசியும் தாக்கியதாக கூறப்படுகிறது. 



 

இதில் பலத்த அடி மற்றும் காயம்பட்ட நான்கு பேரும் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களைத் தாக்கிய கண்ணையன் மற்றும் ராமு ஆகிய இருவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை  அறிந்த காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு நடந்த சம்பவங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.