புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் புதுச்சேரி அரசு செயலாளர் அசோக் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கொரோன தொற்றுப் பரவல் காரணமாக, ஏற்கெனவே அக்டோபர் 15 ஆம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோன தொற்று குறைந்து வருவதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மேலும் அக்டோபர் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இதே போல் தினசரி, சமுதாயப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.


கடைகள், வணிக நிறுவன ஊழியர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். கடற்கரை சாலை, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் அனைத்தும், அனைத்து நாட்களும் வழக்கமான நேரங்களில் முழுமையாகத் திறந்திருக்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம். திருமண விழாக்களில் அதிகபட்சம் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். அனைத்து விதக் கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம்.




அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மது கூடங்களுடன் கூடிய விடுதிகள், தேநீர் கடைகள், பழச்சாறு நிலையங்கள் குளிர்சாதன வசதியின்றி இரவு 11 மணி வரை இயங்கலாம். மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம். படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் கொரோன விதி முறைகளை பின்பற்றிமு ழுமையாக இயங்கலாம். திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் கொரோனா விதிகளை பின் பற்றி நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் இன்று புதிதாக 37 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 99 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 512 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 611 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 73 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 836 (98.07 சதவீதம்) ஆக உள்ளது. புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.


திமுகவின் வாயாக இருந்து பேசுவதை நிறுத்திக்கொள்ளாவிடில் பாடம் புகட்டுவோம் - புதுச்சேரி அதிமுக