திமுகவின் வாயாக இருந்து பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிடில் சரியான பாடத்தைப் புகட்டுவோம் என கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த புகழேந்திக்கு, புதுச்சேரி அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்துப் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:


நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்ற திமுக, அதிமுகவைக் குறைத்துப் பேசிவருவது கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்து உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றனவா? என்கிற விதத்தில் பேசியுள்ளார். 1991-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சியில் இருந்த திமுக முற்றிலும் முழுமையாகத் தோல்வியடைந்து திமுக தலைவர் கருணாநிதி துறைமுகம் தொகுதியிலும், பரிதி இளம்வழுதி எழும்பூர் தொகுதியிலும் மட்டும் வெற்றி பெற்றதை மறந்துவிட்டு திமுக இன்று வீண் ஆர்ப்பாட்ட அரசியலை நடத்துகிறது.




தற்போது நாடாளுமன்றம், சட்டப் பேரவை, உள்ளாட்சி நிர்வாகம் மூன்றிலும் என அதிகாரத்தில் உள்ள திமுகவை 2024-ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக படுதோல்வியைச் சந்திக்கும் நிலையை நிச்சயம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், தொண்டர்களும் நிறைவேற்றுவார்கள். கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த புகழேந்தி அங்கு அதிமுகவை வீணாக்கிவிட்டு, பல்வேறு தவறுகள் செய்து, இருந்த கட்சிக்கெல்லாம் துரோகம் செய்து தற்போது தலைமறைவாக ஜெயலலிதா பெயரைச் சொல்லி தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாழ்ந்து வருகிறார்.


புதுச்சேரியில் அதிமுக வலிமையாகவும், விவேகமாகவும், சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இணை ஒருங்கிணைப்பாளரைக் கைது செய்ய வேண்டும் என கூறும் புகழேந்தி, திமுகவின் வாயாக இருந்து கொண்டு பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், அவரது பாணியிலேயே அவருக்குப் புதுச்சேரி அதிமுக சரியான பாடத்தைப் புகட்டும் இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.


அதிமுக முன்னாள் செய்திதொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நான் முன்பே கூறியது போல் 80 சதவீதம் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் தோல்வி மிகுந்த வேதனையளிக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இயக்கமாக இருந்த அதிமுக தேய்ந்து வருகிறது. கட்சி இயக்கம் முற்றிலும் சிதைந்துள்ளது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மீதான அதிருப்தியால்தான், திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது.


வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் கூட அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துச் செல்லி, நாம் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று அறிக்கை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் திமுக கொல்லைப்புறமாக வந்து வென்று விட்டார்கள் என்று சொல்லி, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறவில்லை. அதிமுக நன்மை அடைய வேண்டுமெனில் பழனிசாமி கட்சியிலிருந்து வெளியேற வேண்டும். பழனிசாமி வெளியே சென்றால் தான் கட்சியை காப்பாற்ற முடியும். ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும், கட்சிக்கும் அவர் துரோகம் செய்துள்ளார்.


அதிமுக தோல்வியின் காரணமாக தொண்டர்கள் துவண்டு போய் உள்ளனர். ஓ.பி.எஸ்ஸை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். இன்னும் கட்சியின் மீது பற்றோ, வேகமோ இல்லாவிட்டால், புதுச்சேரியில் அதிமுக பூஜ்ஜியமாகி விட்டது போல, தமிழகத்திலும் சரிவைச் சந்திக்கும். பழனிசாமியை ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கவில்லை என்றால், தொடர்ந்து அதிமுக தோல்வி அடையும். பழனிசாமி, வேலுமணி, தங்கமணி தாமாகவே கட்சியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்துவேன். கட்சியை காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். கொடநாடு கொலை வழக்கில் பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என்றார்.