கடலூர்: பண்ருட்டி அருகே தவறான சிகிச்சையால் நான்கு வயது குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்து உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாஸ்கர். இவரது மனைவி ராஜஸ்ரீ, அந்த தம்பதிகளுக்கு பானு ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
பானுஸ்ரீக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த 13-ந் தேதி காடாம்புலியூர் பகுதியில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றில் பானுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காய்ச்சல் குறைவதற்கு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பானுஸ்ரீக்கு ஊசி போட்ட இடத்தில் புண்கள் ஏற்பட்டு குழந்தை வலி தாங்க முடியாமல் மூச்சுப் பேச்சு இன்றி மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பானுஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பின்னர் குழந்தை உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்து காடாம்புலியூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காடாம்புலியூர் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தவறான சிகிச்சை அளித்ததால் நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்