தமிழகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து உள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் தற்பொழுது வரை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, கடலூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை இடைவிடாது தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது இதனால் மாவட்டத்தின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதகரித்து உள்ளது.

 



 

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இளமங்கலம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இளமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் மதியழகன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் நேற்று உயிர் இழந்தார். அக்கிராமத்தில் உள்ள சின்ன ஓடை, பெரிய ஓடை என இரண்டு முக்கிய ஒடைகளிலும் வெள்ள நீரானது அக்கிராம விளை நிலங்கள் மற்றும் சுடுகாடு பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து நீர் ஓடிக்கொண்டு இருப்பதால் உயிரிழந்தவரின் உடல்களை புதைக்க வழியின்றி தவித்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று உயிரிழந்த ராஜேஸ்வரி அவர்களின் உடலை புதைக்கவோ, எரிக்கவோ இடம் இல்லாமல் தவத்து வந்தனர் பின்னர் வேறு வழி இன்றி அக்கிராம குடியிருப்பு பகுதி அருகில் கட்டைகள் அடுக்கி எரிப்பதற்காக தயார் செய்து வைத்து அங்கேயே ராஜேஸ்வரி யின் உடலை எரித்து உள்ளனர். 

 



 

மேலும், அக்கிராம சுடுகாட்டு பகுதியை மேடு உயர்த்தி, தடுப்பணைகள் கட்டி, மழைக்காலங்களில் நீர் உள்ளே செல்லாதவாறு சுற்று சுவர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். அதுமட்டும் இன்றி முதன் முறையாக இது போன்ற நிகழ்வு நடைபெறுவதால் அக்கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது, மேலும் இனியும் தொடர்ந்து மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில் இனி வரும் காலங்களில் இதுபோல் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.