புதுச்சேரி அரசும், கால்நடைத் துறையும் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டு, கோமாரி நோய் தாக்கத்தில் உயிரிழந்த கன்றுகளுடன் சட்டப் பேரவை முன்பு பாதிக்கப்பட்டோர் போராட்டம் நடத்தினர். இதனால் சட்டப்பேரவை வாயில் மூடப்பட்டது.


கோமாரி நோய் பாதிப்பால் புதுச்சேரியில் ஏராளமான மாடுகள், கன்றுகள் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக பாகூர், ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை உயிரிழப்புகள் அதிக அளவில் உள்ளன. கால்நடைத் துறை மருத்துவமனைகளில் மருந்துகளோ, தடுப்பூசியோ இல்லை எனக் குற்றச்சாட்டுகளைக் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அரசு சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கியதாக தெரிவித்தனர். ஆனால், முழு அளவில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தொடர்ந்து கால்நடைகள் உயிரிழப்பு தொடர்கிறது.


'சத்துணவு திட்டத்திற்கும் அம்மா உணவகத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் ஆர்.எஸ்.பாரதி’ பாபு முருகவேல் விளாசல்..!


இந்த நிலையில், புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் வீட்டில் வளர்த்து வந்த ஒரு மாடும், 4 பசுங்கன்றுகளும் கோமாரி நோய்த் தாக்கத்தில் பாதித்து தற்போது உயிரிழந்துள்ளன. இதனால், விரக்தியடைந்த அவர், இன்று புதுச்சேரி சட்டப் பேரவைக்கு முன்பு இறந்த பசு கன்றுகளைக் கொண்டு வந்து மடியில் போட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அப்பகுதி விவசாயிகளும் கலந்து கொண்டனர். இதையடுத்து சட்டப்பேரவை வாயில் மூடப்பட்டது. தகவல் அறிந்து வந்த புதுச்சேரி பெரியகடை போலீஸார், இது தொடர்பாகக் கால்நடை துறையினரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி அனுப்பினர். இறந்து கிடந்த பசுங்கன்றுகளைப் புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.




போராட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி தனியார் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், புதுவையில் கோமாரி நோய்க்குக் கடந்த மே, ஜூன் மாதங்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும். இரண்டு மாதம் தாமதமாக தடுப்பூசி போடும் பணியை அரசு தொடங்கியது. நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் கோமாரியால் இறந்துள்ளன.


தற்போதைய கனமழையால் தடுப்பூசி போடும் போது ஏற்படும் காய்ச்சல் பாதிப்பில் கடுங்குளிரில் மாடுகள், கன்றுகள் உயிரிழந்து வருகின்றன. கால்நடைத் துறையினரிடம் தெரிவித்தாலும் அவர்கள் அலட்சியமாகத் தடுப்பூசி போடுகின்றனர். கால்நடை வளர்ப்போர் முறையிட்டாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடாவது தரவேண்டும் என்று குறிப்பிட்டார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூட்யூபில் வீடியோக்களை காண