கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியில் கடந்த 200 வருடங்களாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று முக்கனி வாரசந்தை நடைபெற்று வருவது வழக்கம். இங்கே மா, பலா, வாழை மற்றும் காய்கறிகள், அனைத்து பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.  இந்த நிலையில் கடந்த வருடமும் இந்த வருடமும் கொரோனா தொற்று நோய் பரவல் ஏற்பட்ட காரணத்தினால் வார சந்தை திறக்க கூடாது என மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உத்தரவிட்டது, இதன் காரணமாக தொடர்ந்து கடந்த ஒன்னறை வருடம் முன்பு முதல் வார சந்தை இயங்கவில்லை. ஆனால் தற்பொழுது சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா நோய் கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டு தற்போது மீண்டும் வாரச் சந்தைக்கு வழக்கம் போல் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள், விற்பனை செய்வதற்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சென்று பார்த்த போது, சில தனி நபர்கள் வார சந்தை இயங்கி வந்த இடத்தினை பிளாட் போட்டு விற்பனை செய்து கட்டிடம் கட்டி வருகின்றனர். 

 



 

இது சம்பந்தமாக குள்ளஞ்சாவடி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர், தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இடத்தை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து ஆய்வு செய்த போது அரசு இடம் என தெரியவந்து உள்ளது. பின்னர் இது தொடர்பாக பலமுறை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200 ஆண்டுகளாக இயங்கி வந்த வார சந்தையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார் என்பது குறித்து புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

 



 

மேலும் இந்த வார சந்தையை சார்ந்து சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 150 கிராம மக்கள் பயனடைந்து வந்த நிலையில் தற்பொழுது அவர்கள் அனைவரின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்படைந்து உள்ளது. இதுமட்டும் இன்றி சந்தை இல்லாத காரணத்தினால் சாலை ஓரத்தில் பொருட்கள் விற்பனை செய்ய சென்றால் அதற்கும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆகவே கடலூர் மாவட்ட நிர்வாகம் இனி வரும் காலங்களில் ஆவது உடனடியாக நடவடிக்கை எடுத்து 200 ஆண்டுகளாக இயங்கி வந்த தங்கள் வார சந்தையினை மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்பொழுது விவசாயிகள் கையில் வாழைத்தார் மற்றும் பலா பழங்களுடன் வந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து சென்றனர்.