விழுப்புரம் மேல்தெரு பகுதியில் கடந்த 15-ஆம் தேதியன்று துணிமணிகளை இஸ்திரி செய்யும் தள்ளு வண்டியில் 4 வயது சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவனது உணவுக்குழாயில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாததால் உணவின்றி இறந்திருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.


பிணமாக கிடந்த அந்த சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, அவனது பெற்றோர் யார்? என கண்டுபிடிக்க 4 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் விழுப்புரம் நகரில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் கடந்த 14-ஆம் தேதி இரவு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வந்த 2 பேர், அந்த சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்பி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து பஸ் ஏறிச்சென்றதும் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் சிறுவனை தூக்கிக்கொண்டு வந்து தள்ளுவண்டியில் போட்டு விட்டுச்சென்ற 2 பேரும் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.



சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கடந்த 14-ஆம் தேதி இரவு 10.30 மணி முதல் 1.30 மணிக்குள் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து சென்ற பஸ்களின் விவரத்தை தனிப்படை போலீசார் சேகரித்தனர். அதில் சுமார் 30 பஸ்கள் வந்து சென்றிருப்பது தெரியவந்ததால் அந்த பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் இருந்து வந்த பஸ்சில்தான் சிறுவனுடன் 2 பேர் இறங்கியிருப்பது தெரியவந்தது.


இதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்குள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. காட்சியில் இருவரும் வந்தது உறுதி செய்யப்பட்டால் அப்பகுதியில் தீவிரமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.



மேலும் சிறுவன் அணிந்திருந்த சட்டை காலரில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்திற்கான ஸ்டிக்கர் இருந்ததால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அங்கன்வாடி மைய ஊழியர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கும் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கும் சிறுவன் பற்றிய விவரங்களை போலீசார் அனுப்பியுள்ள போதிலும் இதுவரையிலும் எந்தவித துப்பும் துலங்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.


சிறுவனை நரபலி கொடுக்க முடிவு செய்து அவனை கடத்திக்கொண்டு வந்து சில நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கலாம் என்றும், அந்த சிறுவன் தனது பெற்றோரை தேடி அழுது புலம்பி உணவு சாப்பிடாமல் பட்டினியால் இறந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  சிறுவனை தூக்கிச்செல்லும் நபர்கள் குறித்த வீடியோ காட்சி பதிவுகளை பல்வேறு சமூக ஊடகங்களிலும் போலீசார் அனுப்பியுள்ளதோடு அதுபற்றிய தகவல் தெரிந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு 04146-222172 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.