7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 66 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள எழுத்தூரைச் சேர்ந்தவர் மணி (66). கடந்த 13-2-2021 அன்று அவரது பேத்தியுடன் 2 ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவரை தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்ற அந்த முதியவர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அப்போது, அச்சிறுமி அழுத போது அவரை கன்னத்தில் அடித்ததோடு, கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். மேலும், இதனை வெளியே சொல்லக் கூடாதெனவும் மிரட்டியுள்ளார்.

 


 

பின்னர், இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அதில், குழந்தையை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய மணிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.



 

இதனையடுத்து, அவர் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவருக்கு மாவட்ட நிர்வாகத்திடம் ரூ.5 லட்சம் பெற்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வழங்க வேண்டும். 30 நாட்களுக்குள் இந்த தொகையை வழங்க வேண்டுமென நீதிபதி தெரிவித்தார்.