மகாராஸ்டிரா மாநிலம் நாசிக்கில் , மாதவிடாயை காரணம் காட்டி மரங்களை நடக்கூடாது என ஆண் ஆசிரியர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மாதவிடாய் காலத்தில் மரம் கருகிவிடும் !


மாகாராஸ்டிரா மாநிலம் நாசிக்கின், த்ரிம்பகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள தேவ்கௌனில் பெண்களுக்கான ஆசிரமப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் சில பழங்குடியின மாணவிகளும் அடக்கம். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தோட்டக்கலை வகுப்பு நடைப்பெற்றுள்ளது. இதில் மாணவிகள் அனைவரும் பள்ளியை சுற்றி மரங்களை நட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மாணவிகளின் அறிவியல் ஆசிரியர் (ஆண்) மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் மாணவிகள் மரக்கன்றுகளை நடக்கூடாது, அவ்வாறு நட்டால் மரம் கருகிவிடும் என சம்பந்தப்பட்ட மாணவி  உட்பட சில மாணவிகளை ஓரமாக நிற்குமாறு கூறியிருக்கிறார்.




மாணவி புகார் :


இந்த சம்பவத்திற்கு பிறகு மாணவி இது குறித்து ஆதிவாசி விகாஸ் பவனுக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.  சிறுமியின் புகாரின் பேரில் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை  விசாரணைக்கு உத்தரவிட்டது. புதன்கிழமை, நாசிக் மாவட்ட கூடுதல் கலெக்டரும், டிடிடி திட்ட அதிகாரியுமான வர்ஷா மீனா சிறுமியை பள்ளியில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.விசாரணையில் கடந்த ஆண்டு மாதவிடாய் காலத்தில் சிறுமிகள் சிலர் நட்ட மரக்கன்றுகள் வளராததால் ,அறிவியல் ஆசிரியர் அவ்வாறு கூறியதாக தெரிகிறது.அதே போல சிறுமியின் வகுப்பு தோழிகள் , மாணவிகள், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர் மற்றும் முதல்வர் உட்பட அனைவரின் வாக்குமூலங்களையும் கேட்ட பிறகு விசாரணை நடத்தப்படும்" என்று கூடுதல் ஆணையர் சந்தீப் கோலைட் தெரிவித்தார்.




அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் :


ஷ்ரம்ஜீவி சங்கத்னாவின் நாசிக் மாவட்டச் செயலர் பகவான் மாதே கூறுகையில் “ சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவிகளின் வகுப்பு ஆசிரியர் என்பதால் , 80 சதவிகித தேர்ச்சி மதிப்பெண்கள் அவரின் கைவசம் உள்ளது. எனவே மாணவி அவரை நேரடியாக எதிர்க்க முடியாது. இதை வைத்து பலமுறை ஆசிரியர்கள் மிரட்டுவது வழக்கமான ஒன்றாகத்தான் தெரிகிறது. அதோடு மாணவிகளின் சேர்க்கைக்கு Urine Pregnancy Test கட்டாயம் என புகார் அளிக்கப்பட்டது. அப்படியான ரூல்ஸ் எதுவும் பள்ளியில் இல்லை. அது தவறான தகவல்” என்றார். மேலும்  புகார் அளித்த பழங்குடி மாணவியையும் அவரது தோழிகளையும் ஆசிரியர்கள் அடிக்கடி கேலி செய்வதாகவும் ,விடுதியில் அவர்கள்  குளிக்க சுடு தண்ணீர் , படுக்க மெத்தை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.