மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி நெய்வேலி புவனகிரி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள 37 க்கும் மேற்பட்ட கிராமங்களில் என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த முறை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு, வழங்கப்படாத நிலையில் இனி என்.எல்.சி-க்கு நிலம் தர மாட்டோம் என விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டது. இந்த பணியின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மக்களை பணி நடைபெறும் இடத்திற்கு வரவிடாமல் காவல்துறையினர் அக்கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் என்எல்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் காவல்துறையை ஏவி அடக்கு முறையை கையாண்டு நிலங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபடுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.





இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெறும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் வழக்கம் போல் கடைகள் மற்றும் பேருந்துகள் இயங்கும் என்றும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

முழு அடைப்பு என்பதால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி நெய்வேலி மற்றும் புவனகிரி ஆகிய பகுதிகளில் 80 சதவீதம் கடைகள் மூடப்பட்டு உள்ளன. மாவட்டத்தின் பிற பகுதிகளில் 50% கடைகள் மூடப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படவில்லை எனினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

 

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் என் எல் சி நிறுவனமும் தமிழக அரசும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டங்களை நடத்த அந்தந்த பகுதிகளில் திரண்டனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபடும் முயன்ற பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் ஏற்கனவே 55 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி என மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட முயன்ற 250க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.