கடலூர் மாவட்டத்தில் இருந்து அனைத்து வழித்தடங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.
என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக என்எல்சி நிறுவனமும் கடலூர் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையை ஏவி விட்டு அடக்கு முறையை கையாண்டு இருப்பதாகவும், நிலம் சமன் செய்யும் பணியை நிறுத்த வலியுறுத்தியும் நேற்று பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வழக்கம்போல் பேருந்துகள் மற்றும் கடைகள் இயங்கும் எனவும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையின் சார்பில் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் , கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியசேவலில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கல் வீசி பேருந்து கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மறுநாள் கடலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு, மற்றும் தனியார் பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டன. சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு கமெண்டர் எஸ்.பி தலைமையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 7000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் இயங்கவில்லை.
கடலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் கடலூரில் பெரும்பான்மையான கடைகள் இயங்கவில்லை, மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, நெய்வேலி, விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் 80 சதவீதம் கடைகள் இயங்குகின்றன. சிதம்பரத்தில் பாமக சார்பில் நடைபெறும் கடையடைப்புக்கு வணிகர்கள் ஆதரவு இல்லை என அறிவித்த நிலையில் சிதம்பரத்தில் கடைகள் இயங்கியது. பாட்டாளி மக்கள் கட்சி முழு அடைப்பு போராட்டத்தால் கடலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.