கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சக்திவிளாகம் கிராமம் உள்ளது. இங்கு உள்ள காளியம்மன் கோவில் அருகில் அதே கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவர் தனது நண்பர்களுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு சுமார் 10 மணியளவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தான் ஓட்டி வந்த டிராக்டரை ராமதாஸின் மேல் திடீரென ஏற்றினார், பின்னர் அங்கு இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் களைந்து அங்கு இருந்து தப்பித்து ஓடினர். இதனால் கிராமத்திற்குள் பதற்றம் ஏற்பட்டது. 

 

பின்னர் அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மற்றவர்கள் ஓடி சென்று, உடனடியாக கிராம மக்கள் ராமதாஸின் உடலை ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து இறந்த ராமதாசின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் டிராக்டரை ஏற்றி கொலை செய்த ஸ்ரீதர் டிராக்டருடன் தலைமறைவு ஆனார். 

 



 

இறந்த ராமதாசுக்கு சுசிலா என்ற மனைவியும் ஆதி என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். தற்போது சுசிலா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, பின்னர் இந்த சம்பவம் குறித்து ஒரத்தூர் காவல் துறையினர் இடம் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கொலைக்கான காரணம் குறித்து, மேலும் தலைமறைவான ஸ்ரீதரை தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீதர், மகாராஜன், பரமசிவம் எனும் மூன்று பேரின் மேல் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர்.

 



 

இதனிடையே இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியானவரும், டிராக்டர் ஏற்றி ராமதாசை கொலை செய்தவரும் ஆன ஸ்ரீதர் விருத்தாசலம் நீதிமன்றில் சரணடைந்தார். மேலும் அதே பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த மூன்றாவது குற்றவாளியான மகாராஜனை சுற்றி வளைத்து காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் தற்பொழுது தலைமறைவாக உள்ள இரண்டாவது குற்றவாளியான ஸ்ரீதரின் தந்தை பரமசிவத்தை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர், மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மிகக் கொடூரமான முறையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.