விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் அனுமதியின்றி சிலைகள் வைத்திருப்பதாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையிலான குழுவினர் ஆரோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டக்கரை கிராமத்தில் உள்ள, ஆரோவில் யான்த்ரா கம்யூனிட்டியில் சிலைகள் இருப்பது தெரியவந்தது. அங்கு வசித்து வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போப்போ பிங்கலின் மனைவி மோனோடாக்டர் பிங்கல் என்பவரது வீட்டில், 50 செ.மீ., உயரமுள்ள நடராஜர் சிலை, 45 செ.மீ., உயரமுள்ள சந்திரசேகர் சிலை, 56 செ.மீ., உயரமுள்ள அம்மன் சிலைகள் அனுமதியின்றி வைத்திருப்பது தெரியவந்தது.


இதையடுத்து, வெண்கலத்தாலான 3 சிலைகளையும் பறிமுதல் செய்து கும்பகோணம் எடுத்துச் சென்றனர். இந்த சிலைகள் பல கோடி மதிப்புள்ளவை என போலீசார் தெரிவித்தனர். என்றாலும் இந்த சிலைகளை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதேபோல் கடந்த சிலமாதங்களுக்கு முன், ஆரோவில்லில் பிரெஞ்சு நாட்டவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 20 பழங்கால சிலைகள், கலைப்பொருட்களை  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.


ஆரோ ரச்சனா என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தமிழகத்தைச் சேர்ந்த திருடப்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் இருந்து வளாகத்தை சோதனை செய்வதற்கான உத்தரவைப் பெற்றது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா, சப் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் மற்றும் பிசிக்கள் டிஆர் குமாரராஜா, டிஆர் லெவின் மற்றும் பிரசன்னா ஆகியோர் தலைமையில் ஆரோ ரச்சனாவை சோதனையிட்டபோது, இந்திய தொல்லியல் துறையின் அனுமதியைப் பெற்று, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், பிரான்ஸ் நாட்டுக்கு கடத்த முயன்ற 20 பழங்காலப் பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் அந்த வளாகத்தில் கண்டுபிடித்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவரின் முகவரி இருந்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குழு அதைத் தொடர்ந்து பிரெஞ்சு நேஷனல்ஸ் வளாகம், ஆரோவில்லில் உள்ள டானா ஆரோவைத் தேடினர்.


மேலும், சோதனையின் போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 13 கல் சிலைகள், 4 உலோக சிலைகள், 1 மர கலைப்பொருட்கள், 1 ஓவியம் மற்றும் 1 டெரகோட்டா உள்ளிட்ட 20 கலைப்பொருட்களை கைப்பற்றினர். 1. உலோக விநாயகர் சிலை 2. கிருஷ்ணன் ஓவியம் 3. டொமினிக் கார்டனில் இருந்து நடனமாடும் அப்சரா மரம். 4. பெரிய பிள்ளையார் 5. நடுத்தர பிள்ளையார் 6. சிறிய பிள்ளையார் 7. பெரிய புத்தர் சிலை 8. நடனம் ஆடும் அப்சரா சிலை 9. விஷ்ணு கல் சிலை 10. பார்வதி கல் சிலை 11. அய்யப்பன் கல் சிலை சிறியது 12. ஐயப்பன் கல் சிலை பெரியது 13. நந்தி கல் சிலை 14. கையில் கத்தியுடன் கல் சிலை 15. டெரகோட்டா புத்தர் சிலை (தலை மட்டும்) 16. உறையுடன் கூடிய வெண்கல சொம்பு 17. வெண்கல சொம்பு 18. மயில் விளக்கு 19. அனுமன் சிலை 20. முருகன் சிலை உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.