புதுச்சேரியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.25 லட்சம் ரொக்கத்துடன் 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை கன ஜோராக நடக்கிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து விறுவிறுப்பாக விற்கப்பட்டு வருகின்றன. இதை தடுக்க போலீசார் முனைப்பு காட்டியபோதிலும் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் காவல்துறையில் புதிதாக போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்புப்பிரிவு உருவாக்கப்பட்டு போலீஸ் அதிகாரிகள், போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.


அந்த வகையில் புதுச்சேரியில் இந்த ஆண்டு மட்டும் 100 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இன்று புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். புதுவை தவளக்குப்பம், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, கோரிமேடு ஆகிய போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் உள்ள குடோன்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 500 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புஷ்பநாதன், ரங்கநாதன், அப்துல்காதர், ரமேஷ், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கைதானவர்கள் யார்? யாருக்கெல்லாம் போதைப் பொருட்களை விற்பனை செய்தார்கள்? என்ற தகவலை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து 5 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் போதைபொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.