விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள அமாவாசை திருவிழா மற்றும் திருவக்கரை அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறவுள்ள பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் 14.10.2023 அன்று அமாவாசை திருவிழாவும் மற்றும் 28.10.2023 அன்று திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் பௌர்ணமி ஜோதி திருவிழாவும் நடைபெறவுள்ளது. தொடர் விடுமுறை என்பதால், பக்தர்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறைகள், வள்ளலார் மடம், தற்காலிக பேருந்து நிலையங்கள், திருக்கோவிலுக்கு வரும் வழிகளில் அதிகளவில் குப்பை தொட்டிகளை அமைக்கவும், சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட துப்புரவு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.
மின்சார வாரியத்தின் சார்பில், திருக்கோயிலில் உள்ள மின் வழித்தடங்களை பார்வையிட்டு, சரிசெய்திட வேண்டும். மேலும், திருவிழா நாட்களில் மின் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், திருக்கோவில் சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
காவல்துறை சார்பில், பாதுகாப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகை நடத்துவதுடன், திருட்டு, வழிப்பறி மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போதிய அளவில் காவலர்களை நியமித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் நேரத்தில் திருக்கோயிலின் ஊஞ்சல் மண்டபம் (ம) கிழக்கு மண்டபத்தின் மேற்பகுதியில் எவரும் ஏறாத வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கனரக வாகனங்கள் திருவிழா நாட்களில் செல்லாதவாறு கண்காணித்திட வேண்டும். தீயணைப்புத்துறை சார்பில், திருக்கோயில் வளாகத்தில் தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர் பணியில் ஈடுபட வேண்டும். போக்குவரத்துறை சார்பில், சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்துவதோடு சாலை ஓரங்களில் நிறுத்தாமல் பேருந்து நிலையங்களில் மட்டுமே பேருந்து நின்று செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அனைத்து இணைப்பு சாலைகளையும் இருவழி சாலையாக மாற்றிட வேண்டும்.
சுகாதாரத்துறை சார்பில், சுகாதார மருத்துவ குழுவுடன் அவசர ஊர்தியுடன் திருக்கோவில் வளாகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். உணவுத்துறை சார்பில், திருவிழா நடைபெறும் காலங்களில் திருக்கோவிலுக்கு வெளியே உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களை ஆய்வு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா,இ.ஆ.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கி.ஹரிதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.