விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேடம்பட்டு ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வேடம்பட்டு, நன்னாடு ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள், பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை 


இதனால் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட நடவடிக்கை எடுக்க கோரி வேடம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ஆலையை மூட மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வேடம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தலை முழுவதுமாக புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


கிராம மக்களுக்கு வாந்தி மயக்கம் 


இந்நிலையில் அந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் வேடம்பட்டு கிராமத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஆகியவையால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நிறுவனத்தை மூடக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதனை அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டுக்கொள்ளாமல் மக்களின் உயிரோடு அரசு விளையாடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.


மருத்துவமனையில் சிகிச்சை 


ஆலையால் பாதிக்கப்பட்டு கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது அக்கிராம மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அக்கிராமம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.