நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள் 


சென்னையைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஜெயந்தியின் சொந்த கிராமம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம். இங்கு நாளை திருவிழா நடைபெற உள்ளதால் தனது மாமியார் வீட்டிற்கு பழனி மற்றும் அவரது மனைவி ஜெயந்தி மற்றும் ஓட்டுநருடன்  சென்னையில் இருந்து இன்று காலை தைலாபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.


அப்பொழுது  திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமம் அருகே வந்து கொண்டு இருந்த பொழுது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியம் தாண்டி எதிரே வந்த கார் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


அரசு மருத்துவமனையில் சிகிச்சை 


மேலும், எதிரே வந்த தெலங்கானாவைச் சேர்ந்த கீர்த்தி மற்றும் மணீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பழனி மனைவி ஜெயந்தி மற்றும் இரண்டு கார்களின் ஓட்டுனர்கள் படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவில் கலந்து கொள்ள வந்தபோது விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.