புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலுக்கான வாக்கு பதிவு (19.04.2024) அன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குச்சாவடியிலிருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM & VVPAT) லாஸ்பேட்டையில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களான அரசு மகளிர் பொறியியல் கல்லூரி மற்றும் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் பலத்த பாதுகாப்போடு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, வாக்குப்பதிவு குறித்த சீராய்வு கூட்டம் தேர்தல் பொதுப் பார்வையாளர் டாக்டர். பியுஷ் சிங்லா மற்றும் புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுள் ஒன்றான அரசு மகளிர் பொறியியல் கல்லூரியின் பயிலரங்கு கூட்டத்தில் நடைபெற்றது.
மூன்று அடுக்கு பாதுகாப்பு
வாக்குப்பதிவு குறித்து சீராய்வு செய்த பொதுப் பார்வையாளர் டாக்டர். பியுஷ் சிங்லா புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றுள்ளது. இது தனக்கு முழு திருப்தியைத் தருவதாகத் தெரிவித்தார். பின்னர் பேசிய தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையங்களில் CRPF, IRB மற்றும் மாநில காவல் துறை என மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி கண்காணிப்பு
கட்டுப்பாட்டு அறைகள் உட்பட வாக்குப்பதிவு எண்ணிக்கை மையங்கள் முழுவதும் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் எந்த நேரமும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டு அங்கு ஒளிபரப்பப்படும் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா காட்சிகளை நேரடியாக பார்த்துக் கொள்ளலாம். புதுச்சேரியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய வேட்பாளர்கள் முகவர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.