விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் நிறைவு விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஆகியோர் வழங்கினார்.


உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைந்திடும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் பசலி வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினால் உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக தீர்வு கண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள். அதனடிப்படையில், விக்கிரவாண்டி வட்டத்தில் நடைபெற்ற 1432-ஆம் வருவாய் தீர்வாயத்தில், பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து உடனடி தீர்வின் மூலம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 37 பயனாளிகளுக்கு ரூ.30,12,500/- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 30 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் (முழுப்புலனும்), 16 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் (உட்பிரிவும்), 30 பயனாளிகளுக்கு ரூ.4,92,500/- மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை ஆணையும், 50 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், 3 பயனாளிகளுக்கு ரூ.14,613/- மதிப்பீட்டில் இலவச சலவைப்பெட்டியும், 3 பயனாளிகளுக்கு ரூ.20,850/- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும், 13 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் அட்டையும், வேளாண்மைத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு ரூ.20,000/- மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களும், தோட்டக்கலைத்துறை சார்பில், 2 பயனாளிகளுக்கு ரூ.40,000/- மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு ரூ.13,70,000/- மதிப்பீட்டில் பசுமை வீடு என மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.49,70,463/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், நேரம், காலம் பாராமல் அயராது உழைத்து கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் புதிய தொழில் நிறுவனங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிறுவனங்களுடன் புதிய தொழில்வாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கிட ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றைய தினம் நிதிநுட்ப நகரத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். இதன் மூலம், தமிழ்நாட்டில் அதிகப்படியான தொழிற்சாலைகள் உருவாகுவதற்கு அடித்தளமிடப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி வட்டத்தில், 07.06.2023 முதல் 14.06.2023 வரை நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில், 964 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட அனைத்துமனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்குவதோடு, அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். விக்கிரவாண்டி வட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், நிலமற்ற ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 287 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 1,162 நபர்களுக்கு பட்டாவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்டோர் இனத்தைச் சேர்ந்த 230 நபர்களுக்கு இ-பட்டாவும், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் விளிம்பு நிலை இனத்தை சேர்ந்த 389 நபர்களுக்கு வீட்டுமனை ஒப்படைப்பும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பசுமை வீடுகட்டும் திட்டததில், வீட்டுமனை இல்லாத 543 நபர்களுக்கு வீட்டுமனை ஒப்படைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 233 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ்களும், முழுப்புலன் மற்றும் பட்டா தொடர்பான 8,895 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. உட்பிரிவு பட்டா மாற்றம் மற்றும் இனம் தொடர்பான 17,032 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் ஏற்றத்தாழ்வு என்பதே இருந்திடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள்.


மேலும், பெண்கள் அனைவரும் முன்னேற்றம் பெற்றால்தான் நாடு முழுமையான வளர்ச்சி பெற்றிடும் என்பதை உணர்ந்து, பெண்களுக்கான பல்வேறு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.மேலும், தமிழ்நாட்டில், கிராமப்புற மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்திடும் வகையில், உயர்கல்வியில் இடஒதுக்கீடு, மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகை, காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். எனவே, பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் அரசால் வழங்கப்பட்ட சலுகைகளை பெற்றவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த விதமான சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்கிற முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் அடித்தட்டு மக்கள் வளர வேண்டும் என செயல்பட்டு கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.