சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்களின் குழந்தைத் திருமண விவகாரத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு  செய்துள்ள காவல்துறையினர் 2 பேரைக் கைது செய்துள்ளனர்.


 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து வைப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதன் மீது ஆதாரம் எதுவும் இல்லாமல் வந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து குழந்தை திருமணங்கள் ஆதாரத்துடன் வெளிவரும் நிலையில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக கடந்த வாரம் 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது மேலும் ஒரு சம்பவம் வெளிவந்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிதம்பரத்தில் ஒரு தீட்சிதரின் 13 வயது மகளுக்கு 19 வயது தீட்சிதருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சமூக நலத்துறையின் ஊர் நலத்துறை அலுவலர் சித்ரா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

 

அதன் அடிப்படையில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருமணம் செய்த பத்ரிசன் தீட்சிதர் மற்றும் அவரது தந்தை நாகரத்தினம், மணமகனின் அண்ணன் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜ கணேச தீட்சிதர், தாய் தங்கம்மாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் மணமகனின் அண்ணன் சூர்யா மற்றும் சிறுமியின் தாய் தங்கம்மாள் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பத்ரிசன் தீட்சிதர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.