புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 19ஆம் தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20ஆம் தேதியும் நடக்கிறது.
இந்த நிலையில் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவி பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், கோயில்களில் பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபடலாம் என்றும், கோயில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது. அதனால் தற்போது நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை கோவிலுக்குள் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. நடராஜர் கோயிலுக்கு உள்ளே உள்ள கொடிமரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் பூஜைகள் செய்து கொடி ஏற்றினார். இதில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்றனர், மேலும் தீட்சிதர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டது, அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது,சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் நடைபெற இருக்கும் 10 நாட்கள் திருவிழாவிலும், மற்றும் மூலவர் நடராஜர் பெருமான் தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. இவ்விழாக்கள் காலம் காலமாக பக்தர்கள் பொதுமக்கள் சிவனடியார்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இவ்விழாக்களில் பக்தர்கள் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இது தங்களுக்கு வருத்தம் தரக்கூடியதாகவும் தங்கள் உரிமை மறுக்கப்படுவதும் ஆகும். மேலும் தமிழகத்தில் உள்ள பிற கோயில் திருவிழாக்கள் பிற நிகழ்வுகளுக்கும் பொதுமக்கள் கூடுவதற்கும் பிற மத நிகழ்வுகளுக்கும் வழிபாடுகளுக்கும் மக்கள் கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. ஆனால் தில்லை நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஒரு தலைபட்சமாக தெரிகிறது. எனவே சிதம்பரம் நடராஜர்கோயில் ஆருத்ரா தரிசனம் தேர் திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கியும் திருவிழா எந்த தடையும் இல்லாமல் நடத்தி தரும்படியும் கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டு இருந்தது.