சிதம்பரத்தின் ஏழை எளிய மக்கள் மருத்துவர் அசோகன் மாரடைப்பால் உயிரிழந்த  செய்தி அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் எஸ்.பி கோயில் தெருவில் மருத்துவமனை நடத்தி வருபவர் 70 வயதான அசோகன். இவர் நடத்தி வரும் மருத்துவமனையை  ஒரு மருத்துவமனை என்று சொல்ல முடியாது. ஒரு விடுதியில் பின் பக்கத்தில் உள்ள ஒரு பெரிய ஹாலில், சில மரத்தடுப்புகள் அமைந்து, மர சட்டங்களால் ஆன பெஞ்சுகள் போடப்பட்டு, அதன் அருகில் குளுக்கோஸ் பாட்டில் போடுவதற்கான ஸ்டாண்டுகள் பொருத்தப்பட்ட இடம்தான் மருத்துவர் அசோகனின் மருத்துவமனையின் அடையாளம்.




ஒரு டாக்டரை பார்க்க வேண்டும் என்றால் முன்கூட்டியே டோக்கன் பெற வேண்டும். ஆனால் இவரின் மருத்துவமனையில் டோக்கன் என்ற நடைமுறை கிடையாது. முதலில் வருபவர்கள்  மருத்துவருக்கு முன்னே சென்று நின்றுகொள்ள, அடுத்தடுத்து வருபவர்கள் அவருக்குப் பின்னால் வரிசையில் நின்று கொள்ள வேண்டும். மருத்துவருக்கு தனி அறை கிடையாது. அவரைச் சுற்றி பலர் நின்று கொண்டிருப்பார்கள். மேலும் கசங்காத ஆடைகள் இன்றி கசங்கிய, சுருங்கிய சட்டை பேண்ட் அணிந்திருப்பார். கழுத்தில், கையில் என்று உடலில் எந்த அணிகலனும் இல்லாமல் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் மட்டுமே காட்சியளிக்கும். 




நோய்களிடம் என்ன செய்கிறது என்று கேட்டு ஸ்டெதாஸ்கோப் வைத்து பார்ப்பார். அதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு ஊசி போடப்படுகிறது. மருந்து எழுதித் தந்து வாங்கிக் கொள்ளச் சொல்கிறார். தேவையானவர்களுக்கு குளுக்கோஸ் பாட்டில் போடப்படுகிறது. இத்தனைக்கும் சேர்த்து வெறும் 40 ரூபாய் கட்டணமாக வாங்கிக் கொள்வார். 5 ரூபாயில் தொடங்கி தற்போது 40 ரூபாயாக இருக்கிறது அதுவும் உறுதியான கட்டணம் கிடையாது. நரிக்குறவர் மக்கள், மற்றும் பட்டியல் இன மக்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்று பார்ப்பார். அது மட்டும் இன்றி மருந்து சீட்டு எழுதித் தருவார். அவர் செலவிலேயே மருந்துக் கடையில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் அங்கே அவர்களுக்கு டீ தரப்படுகிறது. மாலை வரை ஓய்வு எடுக்கிறார்கள். மாலையில் ஒரு ஊசி போடுவார். சரியானதும் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அவர்கள் கட்டணம் ஏதும் தருவதும் இல்லை அவர்களிடம் இவரும் கேட்டதில்லை.




இப்படி ஏழை எளிய மக்களின் மருத்துவராக இருந்த அவர் டெங்கு பரவல் மிகத் தீவிரமாக இருந்த காலகட்டத்திலும் சரி, கொரோனா தொற்று உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலும் சரி, எதற்காகவும் தன்னுடைய மருத்துவ சேவையை நிறுத்திக் கொள்ளவில்லை. அப்போதும் அதே அளவு கூட்டம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் வேறு எங்கும் மருத்துவர்கள் பார்க்காததால் வழக்கத்தை விட மிக அதிகமான கூட்டம் கொரோனா காலக்கட்டத்தில் வந்து சென்றது. அத்தனை பேரையும் வெறும் 40 ரூபாய் வாங்கிக் கொண்டு குணமாக்கி  கடவுளாக திகழ்ந்தவர் மருத்துவர் அசோகன்.




கொரோனா பரவலால் உலகம் முடங்கி கிடந்தபோது, மருத்துவர் அசோகன் எந்த அச்சமும் இன்றி காய்ச்சல் நோயாளிகளை பரிசோதித்து மருத்துவம் செய்தார். அப்படிப்பட்ட மனிதர் தன்னைப் பராமரித்துக் கொள்வதில் கோட்டை விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரையிலும் தனது மருத்துவ சேவையை தொடர்ந்து வழங்கி வந்தார். அங்கு பதினைந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு மூன்று வேளை உணவும் சம்பளமும் கொடுத்தார். அங்கே தெருநாய்கள் அதிகம் இருந்தது. பூனைகள் பத்துக்கும் மேல் இருந்தன. அந்த விலங்கினங்களுக்கு தனியாக உணவு சமைக்கப்பட்டு வழங்கியதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 




பத்துக்கு மேற்பட்ட தவணைக்காரர்கள் வருவார்கள். அவர்களிடம் தவணை வாங்கித்தான் அந்த செலவை எல்லாம் அவர் செய்து கொண்டிருந்தார். இப்படி மக்கள் நேயராக, மற்ற உயிரினங்களை நேசிப்பவராக வாழ்ந்த மருத்துவர் அசோகன் நேற்று மதியம் 2 மணி வரையிலும் மருத்துவ சேவையாற்றி இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட உணவு ஒவ்வாமையாகி வாந்தியும், வயிற்றுப்போக்குமாக இருந்துள்ளது. அதையும் பொறுத்துக் கொண்டு மருத்துவ சேவையாற்றிய அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். இவரின் இந்த இழப்பு சிதம்பரம் நகரின் ஏழை எளிய மக்கள் கடவுளாக பாவித்த ஒருவரை இழந்து பெரும் இழப்பை சந்தித்துள்ளார்கள்  என்றுதான் கூறவேண்டும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண