சொத்து வரி உயர்வைக் கண்டித்து கடலூரில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதனைக் கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது. இதன்படி, கடலூரில் இன்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும் வரி உயர்த்தியதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியதாவது, சொத்துவரி உயர்வு மக்களின் மனங்களில் மனச்சுமையை உயர்த்தி உள்ளது. கொரோனா பாதிப்புகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில் வரியை உயர்த்தி இருப்பது மக்களை மேலும் பாதிக்கும். அதே நேரத்தில் அதிமுக வழங்கி வந்த தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகையையும் திமுக நிறுத்தி விட்டது. ஆனால், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் பதிவு கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. மது பானங்கள் விலையை அரசு உயர்த்தியதால் தமிழகம் முழுவதும் சட்ட விரோத கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளது, அதிலும் கடலூரில் மிக அதிகமாக விற்பனை செய்யபட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. கஞ்சா ஒழிப்பு வாரம் என தமிழக டிஜிபி அறிவித்த அன்றே கடலூரில் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இந்த ஆட்சியின் அவல நிலையை காட்டுகிறது.
மேலும், துபாய்க்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொண்ட முதல்வர் ரூ.6,100 கோடி முதலீடு பெற்றதாக கூறுகிறார். ஆனால், தெளிவான எந்த ஒப்பந்தமும் இல்லை. தொழில் வளர்ச்சியில் அதிமுக அமைத்த அடித்தளத்தில் தான் திமுக பயணிக்கிறது என்றார். மேலும் லூலூ மால் தமிழகத்திற்கு வந்தால் சாலை ஓரம் கடை வைத்த உள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் கூறினார். ஆனால் இதற்கு முன்னதாக கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது பேசிய அமைச்சர் லூலூ மால் தமிழகத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, சொரத்தூர் இரா.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், எம்.சி.தாமோதரன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் நாக.முருகுமாறன், எஸ்.சிவசுப்பிரமணியன், அருள், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் க.திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் விருத்தாசலத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் ஆ.அருண்மொழிதேவன் தலைமையில் தனியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.