விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கொழுவாரி ஊராட்சியில் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து வளாகத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடைகள், மேலும் 10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டடம், 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ஒழுந்தியாம்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு  4269.98 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 




மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 2400.77 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அப்போது மேடையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும். அதுதான் எங்களுடைய லட்சியம், இலக்கு என்று பேசினார். குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வாழ்வார்கள் என்ற நிலையில்லாமல், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒற்றுமையோடு வாழவேண்டும் என்று பெரியார் விரும்பினார். அந்த விருப்பத்தின் அடையாளமாக 1997ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்தார். 




 


அனைத்து விதமான முற்போக்குக்குரிய புரட்சிகரமாக நாட்டுக்கு முன்னோடியாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் தான் இத்தகைய சமத்துவபுரம் உருவாகி இருக்கிறது. இதுதான் சமத்துவத்தை பேசிக் கொண்டிருக்கின்ற திராவிட மாடல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "கடந்த பத்தாண்டு கால ஆட்சி தமிழகத்தில் இருண்ட காலம் என்பதற்கு சாட்சியாக கடந்த 2010-11 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பல்வேறு சமத்துவபுரங்களில் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த 90 விழுக்காடு குடும்பத்தினர் அதே வீடுகளில் இன்று வரை ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பது எனக்கு கிடைத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி. இதுவே மக்கள் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டதற்கு சாட்சியாக இருக்கிறது. இத்தகைய உயந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்ட சமத்துவபுரத்தை கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்கபடவில்லை.


இதனால் அனைத்து சமத்துவபுரங்களும் எங்காவது பழுது இருந்தால் அதை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு போய்விடக்கூடாது என்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டமன்றத்தில் தெரிவித்தபடி தற்போது சீரமைத்து வருகிறேன்.  தொகுதி சீரமைப்புக்கு என்றால் வெறும் கட்டிடங்கள் மட்டும் கிடையாது. பிற்போக்கு தனத்தில் இருந்தும், அடிமைத்தனத்தில் இருந்தும் மீண்ட‌ இந்த தமிழகம், சற்றே தேங்கிவிட்ட நிலையையும் சீரமைப்பதும்தான்.




"சமத்துவபுரத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட திட்டம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டங்களும் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும். அதுதான் எங்களுடைய லட்சியம், இலக்கு. இந்திய நாடு வளர்ச்சியடைந்து பல்வேறு சட்டங்களும், திட்டங்களும் செயல்பட்டு இருந்தாலும், சாதியும் மதமும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்று கலைஞர் கூறியிருக்கிறார். இந்த சூழலில் தமிழர்கள் அனைவரும் ஒரே சமுதாயமாக வாழ வேண்டும் என்ற நோக்கற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சமத்துவபுரம் திட்டம். சாதியும், மதமும் அற்ற சம தர்ம சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவது மட்டுமில்லாமல் தமிழ்நாடே சமத்துவபுரமாக காட்சியளிக்க நாம் பாணியாற்ற வேண்டும். அந்த இலக்கை நோக்கித்தான் தற்போது சமத்துவபுரத்தை சீரமைத்து வருகிறேன். 


அண்மையில் தொழில் முதலீட்டுக்கு துபாய் சென்றிருந்த போது அங்குள்ள தமிழர்களிடம் பேசும் போது ஒரு கருத்தை எடுத்துரைத்தேன். சாதியால், மதத்தால் பிளவு படாமல் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வால் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி என்று நான் கூறுவதற்கு காரணம் இந்த சமத்துவ சிந்தனைதான் காரணம். இந்த தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும். இந்திய நாடே சமத்துவ நாடாகவும், சமூக இந்திய நாடாக மாறவேண்டும். இதற்கு தமிழ்நாடும், திராவிட மாடல் தொடர்ந்து வழிகாட்டும்," என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேனார். இதை அடுத்து திண்டிவனம் வட்டம் பெலாக்குப்பம் சிப்காட் தொழில்பூங்கா வளாகத்தில், ரூ.500 கோடி மதிப்பீட்டில் லோட்டஸ் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண