விழுப்புரத்தில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக சென்றால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறி வேகமாக சொல்கிறது. குறிப்பாக விழுப்புரத்தில் இருந்து வளவனூர் வரை உள்ள 10 கிலோ மீட்டர் சாலைகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலியனூரில் தனியார் பஸ் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து அந்த பஸ் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அதிவேகமாக தனியார் பஸ்கள் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், வசந்த் மற்றும் போலீசார், விழுப்புரம் ராகவன் பேட்டை பகுதியில் வாகனங்களின் வேகத்தை கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விழுப்புரம்- கடலூர், விழுப்புரம்- புதுச்சேரி, புதுச்சேரி- விழுப்புரம், விழுப்புரம்- வளவனூர் ஆகிய மார்க்கங்களில் இருந்து அதிவேகமாக வந்த 40 தனியார் பேருந்துகளை நிறுத்தி அதன் டிரைவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதமாக விதித்தனர். மேலும் அந்த டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் ரத்து செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே தனியார் பேருந்துகள் அனைத்தும் சீரான வேகத்தில் செல்ல வேண்டும். விபத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக சென்றால் சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் எச்சரிக்கை விடுத்தார்.