புதுச்சேரி மாநில அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், இதர பணியாளர்கள் பற்றாக்குறை, போதிய மருந்து, மாத்திரைகள் மற்றும் படுக்கை வசதி இல்லாமை, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் பழுது, ஆம்புலன்ஸ் பழுது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் நோயாளிகள் நாள்தோறும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். மேலும் இன்று ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால், தள்ளுவண்டியில் சிறுவன் ஒருவனை சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவல நிலை ஏற்பட்டு, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் புகாரையடுத்து, அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது உள்நோயாளிகள் பிரிவு, பரிசோதனை கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒரு பெண் தனது கணவருக்கு கடும் வயிற்று வலி காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும், ஆனால் இதுவரை அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை கூட மேற்கொள்ளவில்லை என புகார் தெரிவித்தார்.
உடனே அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையத்தை ஆய்வு செய்வதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சென்றார். அப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையம் பூட்டப்பட்டு, அதன் சாவியை ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழிசை, அவசர சிகிச்சை மையத்தில் இருக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மையத்தையே பூட்டிவிட்டு செல்லும் அளவிற்கு அலட்சியமா என அதிகாரிகளை ஆளுநர் கண்டித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளை உறவினர்கள் இறக்குகின்றனர். அதனை நேரடியாக பார்த்தேன். சாமானிய மக்களின் நம்பிக்கையே அரசு மருத்துவமனைதான். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேலும் மேம்படுத்தப்படும். அதில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும். ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் எடுத்த செல்லாதது தவறு தான். அந்த ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 3 மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.