பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருப்பது சொத்து பட்டியல் தான். ஊழல் பட்டியலை அவர் வெளியிடவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
பாதாள சாக்கடை திட்டம்:
திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, ரூ. 268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில், மொத்தம் 6 இடங்களில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், வகாப் நகரில் மக்கள் வசிக்கும் மையப்பகுதியில் கழிவு நீர் உந்து நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எம் பி சிவி.சண்முகம் எம்.பி., அர்ச்சுணன் எம்.எல்.ஏ., ஆகியோர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணியை பார்வையிட்டனர். அப்போது, பொது மக்கள் எதிர்க்கும் போது, ஏன் அப்பகுதியில் திட்டத்தை மேற்கொள்கிறீர்கள் என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.
தவறான தகவல் தந்த தி.மு.க.:
எம்.பி. சிவி சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "விஞ்ஞான ரீதியாக எந்த வித பாதிப்பும் இல்லாமல் பாதாள சாக்கடை திட்டப்பணியை மேற்கொள்ள வேண்டும். இப்பகுதியில், 13 ஆயிரம் சதுர அடி காணவில்லை. இருப்பதே 4 ஆயிரம் சதுர அடி மட்டுமே உள்ளது. இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. தி.மு.க., அரசு, தவறான ஒரு தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அப்போதே 13 ஆயிரம் சதுர அடி இல்லை எனக்கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறியிருந்தால், கண்டிப்பதாக இப்பணியை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கும்.
இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளது. திண்டிவனம் நகரம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும், இப்பகுதியில் தண்ணீர் பிரச்னை வராது. நிலத்தடி நீர் நிரம்பி இருக்கும். இந்த நிலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, தொட்டிகள் கட்டப்படுவதால், தண்ணீர் உறிஞ்சப்படுவதோடு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்ற இடம் நெடுஞ்சாலைத்துறையில் உள்ளது.
ஊழல் பட்டியல் அல்ல, சொத்து பட்டியல்:
ஆனால் தி.மு.க., எந்த உள்நோக்கத்திற்காக பொது மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த தொட்டியை கட்டுவோம் என்று கூறுவதற்கு காரணம் என்ன. எனவே இந்த அரசு உரிய கவனம் செலுத்தி, மக்களுடைய கோரிக்கையை ஏற்று, மாற்று இடத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறினார். ஆனால் அவர் வெளியிட்டிருப்பது சொத்து பட்டியல். ஊழல் பட்டியல் என்றால், ஒரு துறை அமைச்சர் இந்த பணிகளில் ஊழல், முறைகேடு செய்தார் என்பது தான். சொத்து பட்டியல் என்பது சட்டசபை, எம்.பி., தேர்தலில் நிற்பவர்கள், தேர்தல் துறையிடம் பிரணாம பத்திரமாக தாக்கல் செய்திருப்பார்கள். அண்ணாமலை சொல்வது பினாமியால் சேர்த்ததாக கூறியுள்ளார். பினாமி சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. ஏன் மத்திய அரசு, கடந்த 8 ஆண்டுகளாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. ஒரு அமைச்சர் மீதாவது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறதா? நான் அடிப்பது போல் அடிக்கிறேன். நீ அழுவது போல் அழு என்று கூறுவதாக உள்ளது" என்றார்.