ஆயுத பூஜையும் விஜய தசமியும் ( Ayudha Pooja 2023 Tamil Nadu ) 


கல்விக்கு அதிபதியாக இருப்பவர் சரஸ்வதி என்று நம்பப்படுகிறது. விஜய தசமி நாளில் சரஸ்வதியை வழிபட்டு முதன்முதலில் படிப்பை தொடங்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகள் நடைபெறும். முந்தைய நாள் ஆயுத பூஜை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லாடல் இருக்கிறது இல்லையா. ஆம். தொன்மையான விசயங்களில் ஒன்று தொழில் செய்வதற்கு, உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் ஆயுதங்களை பூஜித்து வழிபடுவது. இது பழங்காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது.  இந்தியா முழுவதும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில், துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடுவதைச் முதன்மைப்படுத்துகிறது. தசரா அன்று ராவணனை ராமர் வென்றதைக் கொண்டாடுவதன் மூலம் முடிவடைகிறது. மறுபுறம், துர்கா தேவி அரக்கன் மகிஷாசுரனை வென்றதை, துர்கா பூஜையாக  கொண்டாடப்படுகிறது. துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல்புத்ரியை வழிபடுவதன் மூலம், நவராத்திரி தொடங்குகிறது, அதே சமயம் துர்கா மற்றும் மகிஷாசுரனுக்கு இடையே போர் தொடங்கிய நாளான ,மகாளயபட்சம் அன்று துர்கா பூஜை தொடங்குகிறது.


தசரா அன்று ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பதன் மூலம் நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும். துர்கா பூஜை சிந்தூர் விளையாட்டுடன் முடிவடைகிறது. அங்கு திருமணமான பெண்கள் சிலைகளை மூழ்கடிப்பதற்கு முன்பு, ஒருவருக்கொருவர் சிந்தூர் என்று சொல்லப்படும், குங்குமத்தைக் கொண்டு விளையாடுகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, ​​துர்கா தேவியின் பக்தர்கள் ஒன்பது நாட்களுக்கு இறைச்சி, முட்டை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடாமல் பக்தியுடன் விரதம் இருக்கிறார்கள்.




செய்யும் தொழிலே தெய்வம்


ஆயுதபூஜையை முன்னிட்டு கோயில்கள், தொழில் நிறுவனங்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக பொதுமக்கள் தங்கள் தொழிலுக்கு உதவியாகவும், அடித்தளமாகவும் விளங்கக்கூடிய கருவிகளை அலங்கரித்து வழிபாடுகள் நடத்துவார்கள். இந்த பூஜைகளில், அவல், பொரி, சுண்டல், பழம் உள்ளிட்டவைகளை சாமிக்கு படைத்து ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்கிற அடிப்படையில் தங்கள் வாழ்வில் பயணிக்கும் ஆட்டோவிற்கு நன்றி தெரிவித்து வணங்கும் விதமாக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள "அன்பே சிவம்" ஆட்டோ ஸ்டான்டு ஓட்டுநர்கள் ஆயுத பூஜையை விமர்சையாகக் கொண்டாடினர்.


அனைவரும் தங்களது ஆட்டோக்களை சுத்தம்செய்து வாழைத் தோரணங்களாலும், மாலை அணிவித்து ஆட்டோவை அலங்கரித்து பூஜை செய்து வழிபட்டனர். பல்வேறு தொழில் போட்டிகள் இருந்தாலும் அனைத்து ஓட்டுநர்களும் ஒற்றுமையுடன் இந்த ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பொரி, சுண்டல் வழங்கப்பட்டது. பூஜை முடிந்த பிறகு அனைத்து ஓட்டுனர்களும் சூப்பர்ஸ்டார் ரஜினி பாட்டுடன் ஆட்டோவை எடுத்து வரிசையாக சென்று ஒரு ரைடு வந்தனர்.