விழுப்புரம்: விழுப்புரத்தில் பத்திரபதிவு துறை இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை இரண்டாவது முறையாக சோதனை செய்ததில் கணக்கில் வராத 42 ஆயிரம் ரொக்க பணம் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள பத்திரப்பதிவுத்துறை இணை சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பத்திர பதிவுக்கு கூடுதல் பணம் பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சத்தியராஜ், ஆய்வாளர் ஈஸ்வரி ஆகியோர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
கட்டுக்கட்டாக சிக்கிய பணம்
இந்த சோதனைபோது 4 பேர் பத்திர பதிவு செய்ய காத்திருந்தனர். அதனை தொடர்ந்து இணை சார்பதிவாளர் பொறுப்பு பூங்காவனம் மற்றும் ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத 42 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குபதிவு ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி எடுத்து சென்றனர்.
இதே அலுவலகத்தில் கடந்த மே மாதம் 20ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு இணை சார்ப்பதிவாளர் தையல்நாயகியை கைது செய்தனர். மேலும் அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில சோதன நடத்தி கோடிக்கணக்கில் ரொக்க பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.