விழுப்புரம்: வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் வருவது, தெருவில் எவ்வளவு மாடுகள் வருகின்றது, தெரு நாய்கள், மகளிர் உரிமை தொகை குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறார்கள் என பாமக அன்புமணி ராமதாஸ்  கேள்வி எழுப்பியுள்ளார். 


விக்கிரவாண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...


விக்கிரவாண்டி இடை தேர்தல் நியாயமாக நடக்கவேண்டும். 9 அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு எப்படி பணம் கொடுக்கலாம் என திட்டமிட்டு வருகின்றனர். சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் ஒதுக்கியதற்கு இப்பகுதி அமைச்சர்  தேர்தல் நடத்தும் அதிகாரியை மிரட்டியுள்ளார். இறந்த 15 ஆயிரம் வாக்காளர்கள் பெயரை நீக்க நாங்கள் புகார் மனு கொடுத்துள்ளோம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது குறித்து சட்டசபையில் அமைச்சர்கள் பொய்யாக பேசிவருகிறார்கள். முதல்வர் கூறிய தகவல் பொய்யானது. அம்பாசங்கர் குழுவினர் எடுத்த கணக்கெடுப்பை கொண்டே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில் முதல்வர் எப்படி இப்படி பேசலாம். பீகாரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.


மத்திய அரசு நடத்துவது மக்கள் தொகை கணக்கெடுப்பு. மாநில அரசு எடுப்பது சர்வே. இந்த சர்வேயை கொண்டுதான் பின் தங்கிய சமூக மக்களுக்கு திட்டங்களை தீட்டமுடியும். பறவைகள், தெருநாய்கள் எல்லாம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மகளிர் உரிமை தொகை வழங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதுபோல சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன தயக்கம்?  மத்திய அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தினால் நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலம் இப்படி கணக்கெடுப்பு நடத்தப்பட்டும் தடை விதிக்கப்படவில்லை.


சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு எடுத்தபின்பு தான் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதும் என்பதை நான் வன்மமாக பார்க்கிறேன். இது என்ன நியாயம்? இருக்கும் அதிகாரத்தை இல்லை என்று பொய் சொல்கிறீர்கள்.  அரசு தரவுகள் எடுத்துள்ளது அதைவைத்துதான் அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார். சிவசங்கர் சொன்ன தரவுகளை வெளியிடவேண்டும். இதற்கு அனைத்து சமுதாயங்களை திரட்டி போராடுவோம். முதல்வருக்கும் சமூகநீதிக்கும் சம்மந்தமில்லை. தமிழக அரசு கள்ளகுறிச்சியில் 63 பேரை படுகொலை செய்துள்ளது.  


விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்க ஏலம் விடப்படுகிறது. இதை கள்ளச்சாராய சாவு என்று கூறமுடியாது. இதை கொலையாகத்தான் பார்க்கிறேன். தமிழக மக்கள்மீது முதல்வருக்கு அக்கரை இருந்திருந்தால் 2 எம்எல் ஏக்களை கைது செய்தும், ஒரு அமைச்சரை பொறுப்பிலிருந்து விடுவித்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 


பாஜக கூட்டணியில் உள்ள நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றும் கச்சதீவு மீட்பது தொடர்பாக எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பேசி கொண்டு தான் வருகிறார்கள். ஆனால் இந்த முறை இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் நம்புவதாகவும் இதற்காக வெளியுறவு துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக   தெரிவித்தார்.