என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாள் பிரச்சார விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், நேற்று குறிஞ்சிப்பாடி அடுத்த வானதிராயபுரத்தில் நடை பயணத்தை தொடங்கினர்.

 

இரண்டாவது நாளான இன்று கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வளையமாதேவி கிராமத்தில் நடைபயணத்தை தொடங்கிய அன்புமணி ராமதாஸ், வயலில் இறங்கி விவசாயிகளிடமும், சாலையில் இருந்த பழக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் அனைவரிடமும் எல்எல்சி வெளியேற வேண்டுமென கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

 



 

கரிவெட்டி, கத்தாழை ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்ட அன்புமணி என்.எல் சி நிறுவனத்திற்கு ஒரு பிடி கூட இனி தரமாட்டோம், என்எல்சிக்கு புரோக்கர் போல வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் செயல்படுவதாகவும் அன்புமணி குற்றம் சாட்டினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், என்எல்சி மாநில அரசின் முடிவுகளுக்கு எதிராக ஏன் விளைநிலங்களை எடுக்க துடிக்கிறது என்று கூறினார். என்எல்சி நிலம் எடுப்பு விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் போராடிவரும் நிலையில், அவர்களின் போராட்டம் வேறு, லெட்டர் பேடு கட்சிகள் தான் போராடுகின்றன என்று திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளையும் விமர்சித்த அன்புமணி, அவர்களின் கோரிக்கை வேறு எனது கோரிக்கை என்எல்சி வெளியேற வேண்டும் என்பது, பாமக போராட்ட கட்சி கடுமையான போராட்டங்களை நடத்துவோம், எந்த அளவுக்கு போகும் அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் எனத் தெரிவித்தார்.