புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார். ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ம் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.


இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்வர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதனால் புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் முதல்வர்  ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், காவல் துறை டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.


அதை தொடர்ந்து நேற்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார். நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. ஏனாமில் ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தபடி நேற்று இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் நேற்று காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.


ஏனாம் எம்.எல்.ஏ. கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-


முதலமைச்சரை நான் தவறாக பேசவில்லை தவறாக புரிந்து கொண்டால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் தெரிவித்துக்கொண்டார்.


மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் முன்னாள் அமைச்சர் பற்றி தான் பேசினேன் முதலமைச்சர் மரியாதைக்குரியவர் அவரைப் பற்றி எக்காலத்திற்கும் தவறாக பேசமாட்டேன் சட்டமன்ற உறுப்பினர் அசோக் பேட்டியளித்தார். புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு என் தலைமையில் ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி பொதுமக்களுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது . இக்கூட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர் இந்நிலையில் ஏனாமில் நேற்று முதல் வருகிற எட்டாம் தேதி வரை கலை விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் முதல்வர், அமைச்சர், உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏனாம் வளர்ச்சிக்காக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது 15 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார். நிறைவேற்றி ஏனாம் வந்தால் பூ தூவி வரவேற்போம்.


நிறைவேற்றாமல் ஏனாமுக்கு வந்தால் அதனை தடுக்கும் தற்போது டெல்லி சிறப்பு பிரதிநிதியும் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுக்கு மட்டும் தான் செருப்பு மாலை மக்கள் அணிவிப்பார்கள் என்று கூறினேன் தவிர, மக்கள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய என் ஆர் ஐயாவை பற்றி தவறுதலாக கூறவில்லை, ஒருபோதும் முதலமைச்சர் என்னால் ஐயாவை பற்றி நான் எப்பொழுதும் மரியாதை குறைவாக பேச மாட்டேன் இதனை தவறுதலாக புரிந்து கொண்டு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நான் மன்னிப்பு கூறுகிறேன். மேலும் இதை சில சில்லுண்டிகள் தூண்டி விடுகின்றன அவர்களையும் மீண்டும் கூறுகிறேன் என் தந்தை வயதான என்.ஆர்.ஐயாவை பற்றி நான் தவறுதலாக பேசவில்லை, ஒரு பொழுதும் அவ்வாறு மரியாதை குறைவாக பேசமாட்டேன், மக்கள் பிரச்சினை தடுக்கும் முன்னாள் அமைச்சர் பற்றி மட்டுமே அவ்வாறு கூறினேன். இதனை தவறுதலாக புரிந்து கொண்டுள்ள புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார்.