விழுப்புரத்தில் பொங்கல் தொகுப்பு பெறுவதில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டதால் குடும்ப அட்டைதாரர்களான வயதானவர்கள் வெயிலில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்துகிடந்ததால் வயதானவர்கள் மயக்கமடைந்தால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, 6 அடி நீள செங்கரும்பு, ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்குவதற்கு ஆணை பிறப்பித்து கடந்த 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு, இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புகள் குடும்ப அட்டைதார்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 454 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1254 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் நகர பகுதியான சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் சர்வர் பிரச்சனை காரணமாக காலை 9 மணிக்கு பொங்கல் தொகுப்பு வாங்க வந்த்வர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்து கிடந்தனர். பொங்கல் தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகள் முன்பு டெண்டுக்கள் அமைக்கப்படாததால் வயதானவர்கள் மயங்கி விழுந்தனர். சிலர் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அறிவித்தபடி பல்வேறு ரேஷன் கடைகளில் 6 அடிக்கும் குறைவாகவே கரும்புகள் வழங்கபப்ட்டு வருகிறது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் மோகன் 6 அடிக்கு குறைவாக கரும்புகள் வழங்கப்படாது என அறிவித்திருந்த நிலையில் பல்வேறு இடங்களில் ஆறடிக்கு குறைவாகவே கரும்புகள் வினியோகிக்கபடுவதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.