விழுப்புரம்: கர்நாடக அரசு 35 நாட்களில் செய்ததை 30 மாதங்களாகியும் தமிழக அரசால் செய்ய முடியாதது ஏன்? என்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்யாமல் காலத்தை வீணடிப்பதை விட ராஜினாமா செய்வது மேலானது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு தருவேன் என வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர் அதனை நிறைவேற்றாதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement


தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.  அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபயணம் மேற்கொண்ட பின் மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ்,


விக்கிரவாண்டியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு:


இந்த விக்கிரவாண்டி மண் சமூக நீதி மண்.. டாக்டர் ராமதாஸ் இருக்கின்ற மண். சமூக நீதி போராட்டத்திற்காக 21 உயர்நீத்த மண். 1987 இட ஒதுக்கீடு போராட்டத்தில் இந்த மண்ணை சேர்ந்த பல தியாகிகளை உயிரை இழந்தனர்.


மீண்டும் திமுகவை வெற்றிபெற வைக்காதீர்கள்


கடந்த மூன்று தேர்தல்களில் திமுகவை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தீர்கள்.. ஆனால் தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது சந்துக்கடைகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துவிட்டது. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை நடமாட முடியவில்லை பாலியல் தொல்லை அதிகரித்து விட்டது. தயவுசெய்து 2026 இல் மீண்டும் திமுகவை வெற்றிபெற வைக்காதீர்கள்.


துப்புரவு பணியாளர்களை திமுக ஏமாற்றிவிட்டது


துப்புரவு பணியாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் திமுக ஆட்சியில் கடும் விரக்தியில் இருக்கிறார்கள். துப்புரவு பணியாளர்களை திமுக ஏமாற்றிவிட்டது. சென்னையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள்‌. அந்தப் பணியை தற்போது தனியார் மயமாக மாநகராட்சி முயற்சி செய்கிறது. இவர்கள் துப்புரவு பணியை மேற்கொள்ளவில்லை என்றால் சென்னை சுத்தமாக இருக்குமா? 


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் துப்புரவு பணியாளர்களை பணியை நிரந்தரப்படுத்துவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். துப்புரவு பணியாளர்களின் பிரச்சினை மட்டும் கிடையாது நம் அனைவரின் பிரச்சனை. பொய்யான வாக்குறுதி கொடுத்த திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது..


வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கொடுப்பதாக சொன்ன முதலமைச்சர் ஏன் அதனை நிறைவேற்றவில்லை - அன்புமணி கேள்வி


2019 இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் ஏன் நிறைவேற்றவில்லை? 2019-ல் இதே இடத்தில் அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு தனியாக நாங்கள் கொடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ... அன்று கொடுத்த வாக்குறுதியை இன்று முதலமைச்சர் ஆன நீங்கள் ஏன் நிறைவேற்றவில்லை? இது வன்னியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை கிடையாது . தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. வன்னியர் சமுதாயம் வளந்தா தான் ஒட்டுமொத்த தமிழ்நாடு வளரும். இந்த இட ஒதுக்கீட்டிற்காக தானே 21 ஜாதிகள் இந்த மண்ணில் உயிரை விட்டார்கள். உச்ச நீதிமன்றம் சொல்லியும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை கொடுக்க தமிழக அரசு முன்வரவில்லை. கடைசியாக உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுத்தது.


வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் இல்லை ஆனால் அந்த இட ஒதுக்கீடை கொடுப்பதற்கான தரவுகளை எடுத்து அந்த அடிப்படையில் கொடுங்கள் என உச்சநீதிமன்றம் சொல்லியது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வில்லை. 


அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்?


வன்னியர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக முதலமைச்சரை பலமுறை சந்தித்தோம். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பலமுறை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் கொடுத்த இட ஒதுக்கீட்டை தரவுகள் மூலமாக நியாயப்படுத்தி கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். இந்த இட ஒதுக்கீடை வழங்குவதற்கு சாதி வாரி கணக்கெடுப்பு கூட தேவை கிடையாது.


முதலமைச்சர் இடம் அதிகாரிகள் தவறான தகவலை சொல்லி இட ஒதுக்கீடு கிடைக்க விடாமல் செய்கிறார்கள்.


முதலமைச்சர் சந்திக்க நான் தலைமைச் செயலகம் சென்றிருந்தபோது அங்கு முதலமைச்சர் முடியாது என்பது போல பேசிக் கொண்டிருந்தார் இதனால் கோபமடைந்த நான் ஏன் முடியாது எதனால் முடியாது என ஆவேசமாக கேள்வி எழுப்பினேன் என்னுடன் வந்திருந்தவர்கள் என் கையைப் பிடித்து அழுத்தினர்.. உடனே முதலமைச்சர் அருகில் இருந்த அதிகாரிகளை பார்த்தார். உடனே அதிகாரிகள் இவர்கள் 15% என்று சொன்னார்கள். உடனே நாங்கள் கொண்டு வந்திருந்த தரவுகளை எடுத்துக் காண்பித்தோம் .


குரூப்பு A, குரூப் B, போன்ற பணியிடங்களில் மிக சொற்பமான பணியிடங்கள் மட்டுமே கிடைப்பதை ஆதாரத்தோடு முதலமைச்சரும் காண்பித்தோம். குரூப் டி பணியிடங்களில் மட்டுமே அவர்கள் சொல்வது போல 15 சதவீதம் வரை கிடைத்தது


தமிழ்நாட்டில் 109 பேர் காவல்துறையில் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள்... டிஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என உள்ளனர்.  அதில் ஒரே ஒருவர் மட்டும்தான் வன்னியர் இருக்கிறார். தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் ஒரே ஒருவர் மட்டும்தான் இருக்கிறார் என்றால் என்ன சமூக நீதி எதில் உள்ளது?


வன்னியர்கள் தான் திமுகவிற்கு ஆரம்பம் முதல் தற்போது வரை அதிக அளவில் வாக்கு செலுத்தி வெற்றி பெற வைத்தவர்கள்... 1957-ல் எல்லாமே 15 தொகுதிகளில் 14 தொகுதிகள் வன்னியர் தொகுதிகள் தான் வெற்றி பெற்றீர்கள்.


வன்னியர் சமுதாயத்திற்கும் பட்டியல் சமுதாயத்திற்கும் திமுக துரோகம் செய்து வருகிறது


திமுகவிற்கு தற்போது உள்ள 127 சட்டமன்ற உறுப்பினர்களில் வன்னியர்கள் மற்றும் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக எம்எல்ஏவாக உள்ளனர். ஆனால் இந்த சமுதாயங்களுக்கு தேவையான இட ஒதுக்கீட்டை வழங்க திமுக அரசு மறுக்கிறது. திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கியது ஏ.கோவிந்தசாமி என்ற வன்னியர்... அந்த சமுதாயத்திற்கு திமுக துரோகம் செய்து வருகிறது... அந்த சின்னத்தை வழங்கியவருக்கும் திமுக ஒன்றும் செய்யவில்லை.


கர்நாடகத்தில் 35 நாட்களில் நடந்தது.. தமிழ்நாட்டில் 30 மாதங்களில் கூட நடைபெறாதது ஏன்?


பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் வேலையை செய்ய விடாமல் தமிழக அரசு தடுக்கிறது வேண்டுமென்றே கால நீட்டிப்பு செய்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணியும் தனக்கு உரிய வேலையை செய்ய மறுக்கிறது இன்னும் சொல்லப்போனால் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் அந்த ஆணையத்தின் தலைவராக இருப்பவர் ஓய்வு பெற்ற நீதிபதி அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் ஆனால் அவரது பணியை செய்ய விடாமல் தடுக்கிறார்கள் 6 மாதம் 6 மாதம் என்று காலக்கெடுவை நீட்டித்துக் கொண்டே செல்கிறார்கள். 30 மாதங்களாக இந்த ஆணையம் செய்த பணி என்ன என்பதை விளக்க வேண்டும். 


கர்நாடக மாநிலத்தில் பிப்ரவரி மாதம் தான் ஆணையத்தை அமைத்தார்கள் உடனடியாக அந்த ஆணையும் அதற்கு இட்ட பணியை 35 நாட்களில் செய்து முடித்து அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை.


பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் காலையில் வருவது நியூஸ் பேப்பர் படிப்பது பிறகு டிவி பார்ப்பது பிறகு மதியம் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு செல்வது இவ்வாறாக தான் நடக்கிறது என நினைக்கிறேன்.. இதற்கு எதற்கு உங்களுக்கு ஒரு அலுவலகம் வீடு கார் உதவியாளர் எல்லாம் எதற்கு? 


உங்களால் முடியவில்லை என்றால் ராஜினாமா செய்து விட்டு போங்கள் வேறு யாராவது செய்வார்கள்... நிறைய ஆதங்கம் உள்ளது என அன்புமணி ஆவேசம்...


தமிழ்நாட்டில் உள்ள ஆணையம் சரியாக செயல்பட்டு இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்.. பிற்படுத்தப்பட்ட ஆணைய அதிகாரிகளால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை நாசமாகிவிட்டது.


பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் அவர்கள் வேலைவாய்ப்புக்கு சென்று இருப்பார்கள் வாழ்க்கையில் முன்னேறி இருப்பார்கள் வேலை கிடைக்காத காரணத்தால் அவர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை நாசமாகிவிட்டது.. பிற்படுத்தப்பட்ட ஆணையத்தில் உள்ள தலைவர்கள் மற்ற அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா.. சட்டம் தெரியாதா? இன்னும் எவ்வளவோ உள்ளது அனைத்தையும் பேசினால் அசிங்கமாகிவிடும். கணக்கெடுப்பிற்கும் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தம் கிடையாது ஆனால் தமிழக அரசு ஏமாற்றுகிறது.


கேட்டால் வன்னியர்களுக்கு மணிமண்டபம் கட்டி விட்டோம் என்று சொல்கிறார்கள். மணிமண்டபம் கட்டி விட்டால் வேலைவாய்ப்பு கிடைத்து விடுமா சோறு கிடைக்குமா ஒன்றும் கிடைக்காது.  நாங்கள் கேட்பது இட ஒதுக்கீடு வேலை படிப்பு சுயமரியாதை வேண்டும் என கேட்கிறோம்.


தமிழ்நாட்டிலேயே அதிகமாக மது விற்பனை நடைபெறும் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது.


விழுப்புரத்தில் 109 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது ஆனால் 2000 சந்து கடைகள் உள்ளது. மரக்காணத்தில் கள்ள சாராயம் குடித்து பலபேர் உயிரிழந்தார்கள் அப்போதே அந்த கள்ள சாராயத்தை பெற்றவர்களுக்கு உரிய தண்டனை கொடுத்திருந்தால் அதன் பிறகு கள்ளக்குறிச்சியில் அத்தனை உயிர்கள் பறிபோய் இருக்காது. கள்ளச்சாராயத்தை காய்ச்சுபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் திமுகவினர் தான் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.  கஞ்சா உள்ளிட்ட போதை பொருளை விற்பதும் திமுகவினர் தான். இவ்வாறு அவர் பேசினார்.