தடையை மீறி சுருக்குவலை பயன்படுத்ததாக 25 மீனவர்களுக்கு அரசின் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி, டீசல் மானியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ரத்து என கடலூர் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

 

கடலூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சுருக்குமடி வலை பயன்படுத்தும் தரப்பினர், சுருக்குமடி பயன்படுத்தாத தரப்பினர் என இருதரப்பினர் உள்ளனர். சுருக்குவலை பயன்படுத்துவதால் மீன்வளம் குறைவதாக கூறி அரசு சுருக்கு வலையை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்நிலையில் பலரும் தடையை மீறி மீன்பிடிப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலைகள், அதிக குதிரை திறன் கொண்ட இழுவலை ஆகியவற்றை பயன்படுத்தி கடலில் மீன் பிடித்தால் மீனவர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

 


 

இதனிடையே கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிதம்பரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரையில் சுருக்குமடி வலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

 

இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் தேவனாம்பட்டினம், ராசா பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தடையை மீறி சுருக்குவலை பயன்படுத்தியதாக 25 மீனவர்களுக்கு அரசின் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி, டீசல் மானியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ரத்து என கடலூர் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.