தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வருடா வருடம் நடத்தப்படும் கடலூா் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள், 2021-22-ஆம் ஆண்டுக்கான கடலூா் மாவட்ட அளவிலான கடற்கரை கால்பந்து, கடற்கரை கபடி, கடற்கரை கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நேற்று நடைபெற்றன. போட்டிகளை கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா தொடக்கி வைத்தாா். ஆடவா், மகளிருக்கு தனித் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
கையுந்துப் பந்து போட்டியில் 34 ஆண்கள் அணிகளும், 15 பெண்கள் அணிகளும் பங்கேற்றன. இதேபோல கபடி போட்டியில் 31 ஆண்கள் அணிகளும், 9 பெண்கள் அணிகளும், கால்பந்துப் போட்டியில் 27 ஆண்கள் அணிகளும், 6 பெண்கள் அணிகளும் பங்கேற்றன.கடற்கரை விளையாட்டுப் போட்டிகளானது வழக்கமான ஆட்டங்களில் பங்கேற்கும் வீரா்களை விட குறைவான வீரா்களைக் கொண்டதாகவும், மாறுபட்ட விதிகளைக் கொண்டதாகவும் அமைந்தன. இதனால், போட்டிகளை காண அதிகமானோா் திரண்டனா்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற அணியினருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளில் முதலிடம் பெற்ற அணியினா் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வானதாக மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டன.இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்த மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது கொரோனா தொற்று பரவல் குறைந்த காரணமாக நடைபெற்றது, இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெறுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தனியார் பயிற்சி பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பின் இவ்வாறு வந்து அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் மீண்டும் விளையாடுவது தங்களுக்கு மகழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் மாவட்ட அளவில் நடைபெறும் இந்த கடற்கரை விளையாட்டுப் போட்டிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும் எனவும், விளையாட வரும் தங்களுக்கு கடற்கரையில் நிழலுக்கு என ஒரு சிறிய நிழற்குடை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் எனவும், இந்த கடற்கரை விளையாட்டிற்கு தற்பொழுது தரும் வரவேற்பை விட இனி வரும் காலங்களில் மேலும் பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும் என விளையாட வந்த மாணவ மாணவிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.