புதுச்சேரி வரலாறு இளையோருக்கு தெரிய வேண்டும். தமிழக அரசு பாடநூல்களை இங்கு பின்பற்றுவதால், அதில் புதுச்சேரி வரலாற்றை சேர்க்க கோரியுள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் தொல்காப்பியர் சிலையை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். புதுச்சேரியில் முதன் முதலாக தொல்காப்பியருக்கு நிறுவப் பட்டிருக்கும் இச்சிலைக்கு முதல்வர் மலர் தூவினார். அதைதொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, தொல்காப்பியம் தான் தமிழின் அடிப்படை நுால். தொல்காப்பியர், தான் எழுதிய நூலுக்கு தன் பெயரை வைத்தார். இது போல் செய்ய தனி தைரியம் வேண்டும். அந்த தைரியம் தமிழனுக்கு வரும். ஆராய்ச்சிக்கு அறிவும், மிகுந்த பொறுமையும், ஆழ்ந்த சிந்தனையும் வேண்டும். மற்றவர்கள் எழுதிய நூல்களை வைத்து ஆராய்ச்சி செய்ய தனித்திறன் தேவை. பழமையான நுால்களை படித்து ஆராய்ந்து அதன் முக்கிய சாரம்சங்களை வரும்கால சமுதாயத்தினருக்கு, மாணவர்களுக்கு எடுத்துக் கூறினால் மொழி வளரும். மொழி நன்றாக இருந்தால் மக்களும் நன்றாக இருப்பார்கள்.




மொழி சிறப்பாக இருக்க ஆராய்ச்சிகள் முக்கியம், ஆராய்ச்சி சிறக்க நூலகம் தேவை, இதற்காக நூலகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். புதுச்சேரி வரலாறு இளையோருக்கு தெரிய வேண்டும். தமிழக அரசு பாட நூல்களை புதுச்சேரியில் பின் பற்றுகிறோம். அதனால், புதுச்சேரி வரலாற்றை சேர்க்க தமிழக அரசிடம் கோரியுள்ளோம். நல்ல நூல்களை உருவாக்கினால் குழந்தைகளுக்கு அதிகம் பலன் கிடைக்கும். அந்த நூல்களை படித்தால் குழந்தைகளின் நற்சிந்தனை வளரும் என்று தெரிவித்தார்.


நிகழ்வில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, எம்எல்ஏ வைத்தியநாதன், கலைப் பண்பாட்டுத்துறை இயக்குநர் கந்தன், விடுதலைப்போராட்ட வீரர் ரத்தினவேலு அறக்கட்டளை நிறுவனர் ரத்தின வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சம்பத் வரவேற்றார். பேராசிரியர் சாந்தினிபீ நோக்க வுரையாற்றினார். முன்னாள் பேராசிரியர் சிலம்பு செல்வராசு நன்றி கூறினார்.



புதுச்சேரி சார்ந்த வரலாற்று நூல்கள் வெளியீடு:


இந்த நிகழ்வுடன் இணைந்து நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் புதுச்சேரி சார்ந்த வரலாற்று ஆய்வு நூல்களை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். பாகூர் புலவர் குப்புசாமி எழுதிய வரலாற்று ஆய்வுகள், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் சாந்தினிபீ எழுதிய ,அர்பன் சென்டர்ஸ் ஆப் பாண்டிச்சேரி (ஆங்கிலம்) , முனைவர் சிவ இளங்கோ எழுதிய, ஆற்றங்கரை நாகரிங்களில் தமிழ்ப் பண்பாடு , முனைவர் சரவணன் எழுதிய, சங்க காலம் முதல் இன்று வரை வெண்பாவும் பாடு பொருளும், முனைவர் சம்பத்- முனைவர் விவேகானந்ததாசன் எழுதிய, ‘பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்ட வரலாற்று ஆவணங்கள்’ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண