விழுப்புரம்: மாடு மேய்க்கிற நீயெல்லாம் லோன் வாங்க டிகிரி சர்டிபிகேட் எல்லாம் வச்சிருக்கியா என்று பட்டதாரி இளைஞரை பார்த்து தாட்கோ மாவட்ட அலுவலர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பட்டதாரி இளைஞர்:


இன்றைய சூழலில், படித்த இளைஞர்கள் பலரும், சுயத் தொழில் தொடங்க வேண்டும் என்பதில்  அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இன்றைய நிலையில் வேளாண் துறையின் தேவை காரணமாக, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் தொழில் வாய்ப்புகளைத் திட்டமிட்டு வருகின்றனர். இதனை ஊக்குவிக்கும் வகையில், அரசு மானியங்கள் அளித்து வருகிறது.


அதனடிப்படையில், விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான சிவனேசன் என்பவர் மாட்டு பண்ணை அமைக்க கடனுதவி கேட்டு, கடந்த 3 மாதத்துக்கு முன்பாக, விழுப்புரம் மாவட்டத் தாட்கோ அலுவலகத்தில்  விண்ணப்பித்து இருந்தார்.


தரக்குறைவாக பேசிய தாட்கோ அதிகாரி:


அதாவது, தனக்குச் சொந்தமான நிலத்தில் மாட்டு கொட்டகை அமைத்து, அதில் 12 மாடுகள் வளர்ப்பதற்கு ரூ.7 லட்சம் கடனுதவி கேட்டு, சிவநேசன் விண்ணப்பித்து இருந்தார். இதற்கான நேர்காணலில், இவருக்கு கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டு, இரண்டு மாதங்களாகியும், இவருக்கு கடனுதவி வழங்குவதற்கான வங்கி பரிந்துரை கடிதத்தை வழங்காமல் தாட்கோ மாவட்ட அலுவலர் இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பரிதவிப்புக்கு ஆளான பட்டதாரி இளைஞர் சிவனேசன், தாட்கோ அலுவலகத்துக்குச் சென்று, மாவட்ட அலுவலர் மணிமேகலையை நேரில் சந்தித்து, இதுபற்றி உரிய விளக்கம் கேட்டுள்ளார்.


அப்போது, சிவனேசன் கூறிய கருத்துக்கள் எதையும் கேட்க விரும்பாத தாட்கோ மாவட்ட அலுவலர் மணிமேகலை, “மேய்க்கிறது மாடு இதுக்கு டிகிரி சர்டிபிகேட் எல்லாம் வச்சிருக்கியா நீ”  என்று ஏளனமாகப் பேசி இருக்கிறார். மேலும், வங்கியில் கணக்கு வைத்திருந்தால் போதுமா? டெபாசிட் தொகை இருக்க வேண்டும். அப்போதுதான், வங்கி மேலாளர் கடன் கொடுப்பார் என்று முகம் சுளிக்கும் வகையில் பேசியிருக்கிறார். தங்களை நாடிவரும் பயனர்களிடம் பொறுப்பாகவும், பணிவாகவும் பேசுவதற்குப் பதிலாக, பொறுப்பற்ற முறையில் தாட்கோ மாவட்ட அலுவலர் பேசிய இந்த வீடியோ காட்சி, தற்போது இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.