கடலூர் மாவட்டம் பண்ருட்டி வி.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் பழனி (50). இவரது மனைவி ராஜேஸ்வரி (45). இவர்களுடைய மகன் வினோத்குமார் (30). இவருக்கும், குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் பகுதியை சேர்ந்த சூர்யா (21) என்பவருக்கும் கடந்த 30.1.2017 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 20 சவரன் நகை, 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் திருமணமாகி 6 மாதங்களுக்கு பிறகு வினோத்குமாரின் சகோதரி வித்யா அதே பகுதியில் வீடு கட்டி வந்துள்ளார். அதற்கு பணம் தேவைப்பட்டதால் வினோத்குமார், தனது மனைவி சூர்யாவின் நகைகளை அவருக்கு தெரியாமல் அடகு வைத்தார். இதுபற்றி அறிந்த சூர்யா, வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் சூர்யாவை திட்டி தாக்கியுள்ளனர். பின்னர் இதுபற்றி சூர்யா தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதை அறிந்த வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தை இல்லாததை கூறி வாழைப்பழத்தில் புள்ளப்பூச்சியை வைத்து சூர்யாவை வலுக்கட்டாயமாக உண்ண வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதில் மனமுடைந்த சூர்யா 6.4.2018 அன்று கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த வினோத்குமார் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சூர்யாவிடம், பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணையாக 5 பவுன் நகை வாங்கி வரும்படி வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் சூர்யா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று, 4 பவுன் நகையை வாங்கி வந்து கொடுத்துள்ளார். அதன் பிறகும் அவர்கள், சூர்யாவை அடித்து உதைத்து வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதுபற்றி அவர், 9.8.2018 அன்று மகளிர் காப்போம் கரங்கள் மூலம் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சூர்யா மற்றும் வினோத்குமாரை காவல் துறையினர் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் பிறகு வினோத்குமார் தனது மனைவியுடம் பேசாமல் இருந்து வந்தார்.
இதனால் சூர்யா, வினோத்குமாரிடம் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், உன் பெற்றோர் சரியாக சீர்செய்யவில்லை என்றும், உனக்கு குழந்தை இல்லை, அதனால் நீ செத்து விடலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சூர்யா 14.8.2018 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அண்ணன் சிவக்குமார், பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வினோத்குமார், பழனி, ராஜேஸ்வரி, வித்யா ஆகிய 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட வினோத்குமாருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பழனி, ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், வித்யாவுக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.