புதுவையில் புத்தாண்டை கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. நகரமெங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுவையில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில சுற்றுலா பயணிகள் 2 தடுப்பூசிகள் செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலத்தவர்கள் புதுச்சேரியில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வந்த பலர் தொடர்ந்து இங்கேயே முகாமிட்டுள்ளனர். கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட தனியார் ஓட்டல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுவை சீகல்ஸ் ஓட்டல், பழைய துறைமுகம், சுண்ணாம்பாறு படகு குழாம், பேரடைஸ் பீச் போன்றவற்றிலும் புத்தாண்டு கொண்டாட தனியார் நிறுவனங்களை அரசு அனுமதித்துள்ளது.
மதுவிருந்து, உணவு என தனிநபருக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பழைய துறைமுக வளாகத்தில் பிரபல இந்தி நடிகை சன்னிலியோன் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
புத்தாண்டு தினத்தன்று பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒயிட் டவுண் கடற்கரை சாலை-சுப்பையா சாலை, பட்டேல் சாலை, செஞ்சி சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் 31-ந்தேதி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் கூடுபவர்கள் கடலுக்குள் இறங்கி குளிப்பதை தடுக்கும் விதமாக அங்கு தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துமீறல்களை தடுக்கும் விதமாகவும் கூட்டத்தை கண்காணிக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை விரைவில் அடையாளம் காணும் வகையிலும் 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
புத்தாண்டை கொண்டாட வருவோர் எங்கெங்கு வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புத்தாண்டு நெருங்கிய நிலையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்து முகாமிட்டுள்ளனர். நவநாகரீக ஆடைகளுடன் அவர்கள் வீதிகளில் உலா வந்தவண்ணம் உள்ளனர்.
வெளிமாநில வாகனங்கள் ஆயிரக்கணக்கில் புதுவைக்கு வந்துள்ளதால் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வர உள்ளனர். அப்போது மேலும் நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு காரணமாக அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. முன்பதிவு செய்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு அறையில்லை என்ற நிலை நிலவுகிறது. ஒருசில ஓட்டல்களில் வழக்கமான கட்டணத்தைவிட 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்