தெற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.நேற்று மாலை முதல் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமன் விவசாயியான இவர் மழை வரும் காரணத்தால் தனது வீட்டின் மாடியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்கும்போது மின்கம்பத்தில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்வது தெரியாமல் அதனை தொட்டபோது ராமன் மீது மின்சாரம் பாய்ந்தது. ராமனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடி வந்த அவரது மகன் மணிகண்டன் தந்தையை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இந்த சோகம் மறைவதற்கு முன்னரே சிறுபாக்கம் அடுத்த சித்தேரி கிராமத்தில் இன்று காலை பெரியசாமி என்பவர் வீட்டின் முன்பு  அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழந்த சம்பவமும் அதிகாலை அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் முதியவர் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

மழைக்காலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியினாலும் சேதம் அடைந்த மின் கம்பங்களாலும் உயிர் இழப்பு ஏற்படுவது கடலூர் மாவட்டத்தில் தொடர்கதை ஆகி வரும் நிலையில் மின்வாரியம் உடனடியாக சேதம் அடைந்துள்ள மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீர் செய்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.